இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: தலைமைச் செயலாளருக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும் நன்றி!

செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனைகளில் நடந்துவரும் தூய்மைப் பணிகளைப் பாராட்டி, ‘அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் புரட்சி’ என்ற தலையங்கம் 12.04.22 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகியிருந்தது. இதனை அடிப்படையாகக்கொண்டு, ‘‘தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரச் சேவைகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைச் செம்மையாகப் பயன்படுத்தலாம்" என்று நான் எழுதிய வாசகர் கடிதம் 14.04.22 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. இதனை ஆதாரமாகக் கொண்டு, ஒரு மனுவாக எழுதி அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் அலுவலகத்திலிருந்து கோரினார்கள்.

‘எந்த மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் சேவை செய்கிறார்களோ அந்த மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். பங்களிப்பு செய்யும் மாணவர்களுக்கு வருட இறுதியில் ஒரு பாராட்டுச் சான்றிதழ், அரசின் நோக்கம் பெருமளவு வெற்றி பெறும். வருடா வருடம் மாவட்ட அளவில் சிறப்பாக இந்தப் பணியைச் செய்யும் கல்லூரிகளுக்குக் குடியரசு தினம்/ சுதந்திர தினம் போன்ற தருணங்களில் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்குவார் என்று அறிவித்தால், மருத்துவமனைகளின் சுகாதாரம் மேலும் மேம்படும்.

அரசுக்கு அதிக நிதிச் சுமை இருக்காது; அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் அதிகரித்து, ஏழை எளிய மக்கள் மனநிறைவுடன் மருத்துவச் சிகிச்சை பெற்றுச்செல்லவும் இது வழிவகுக்கும். உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் உண்மையான சமூகப் பங்களிப்பைச் செலுத்துவதற்கும் தூண்டுகோலாக இருக்கும்’ என்பன போன்ற கருத்துகளை என் மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு சிறிய கடிதத்தை முன்வைத்துத் தலைமைச் செயலாளர் அலுவலகம் எடுத்துள்ள இம்முயற்சி பாராட்டுக்குரியது. தலைமைச் செயலாளருக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும் நன்றி!

- நா.மணி, பொருளாதாரத் துறைத் தலைவர், ஈரோடு கலை-அறிவியல் கல்லூரி.

SCROLL FOR NEXT