ஆசிரியர் உமாமகேஸ்வரி எழுதிய ‘பள்ளிக் கல்வியில் ஓர் வெளிச்சக் கீற்று’ (‘இந்து தமிழ் திசை’, 23.03.22) கட்டுரையில் அவர் வலியுறுத்தியபடி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் (இன்னும் சொல்லப்போனால், பாடத்துக்கு ஒரு ஆசிரியர்), துப்புரவுப் பணியாளர் நியமனம் என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் வெளிச்சக் கீற்றுகள் உருவாகும்.
1997 வரை 20 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்செய்யப்பட்டனர். தற்போது 35, 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் (சில பள்ளிகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர்) என்பதே நடைமுறையில் உள்ளது. 20 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற நியமன முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும். பள்ளிக் கழிப்பறைகள், பள்ளி வளாகம், வகுப்பறைகள் அன்றாடம் தூய்மை செய்யப்படுவது அவசியம். தூய்மைப் பணியாளர் நியமிக்கப்படாததால், குழந்தைகளே தூய்மைப் பணிகளைச் செய்யும் நிலை உள்ளது. குழந்தைகள் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் அல்லல்படும் நிலை காணப்படுகிறது. ஆசிரியர்களும் பணி நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர். பள்ளிக்கு இரண்டு தூய்மைப் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
போதுமான ஆசிரியர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் வெளிச்சக் கீற்றுகள் பரவுவதற்குப் புதிய அரசு ஒளி கொடுக்க வேண்டும்.
- சு.மூர்த்தி, அரசுப் பள்ளி ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.