ஆசிரியர் - மாணவரிடையே 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நல்லுறவு இன்றில்லை. மாணவர்கள் ஆசிரியர்களைப் புரிந்துகொள்வதிலும் ஆசிரியர்கள் மாணவர்களைப் புரிந்துகொள்வதிலும் எண்ணற்ற சிக்கல்கள் எழுகின்றன. பள்ளியின் அருகிலேயே தங்கி ஆசிரியர்கள் பணியாற்றிய காலம் ஒன்று உண்டு. அப்படி அவர்கள் பணியாற்றிய காலத்தில், பள்ளி உண்டு... தங்கள் வீடு உண்டு என்று ஒருபோதும் சுயநலத்தோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய ஆசிரியர்கள் ஊரின் தனிமனிதத் தேவைகளிலும் பொதுத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சமூக வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்றைய பள்ளிச் சூழலைப் பொறுத்தவரை ஆசிரியரும் எங்கிருந்தோ உணவு தேடும் பறவைபோல வருகிறார், மாணவர்களும் எங்கிருந்தோ ஈசலைப் போல வந்துசேர்கிறார்கள். இதனால் எந்த வகையிலும் அறிமுகம் இல்லாத, அன்பில்லாத ஒரு செயற்கைப் பிணைப்பே உருவாகிறது. இன்றைய மாணவர்கள் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரம் மிகவும் அதிகம். முகம் தெரியாத நண்பர்களோடு வயதுக்கு மீறிய, எல்லை கடந்த, பாலுணர்வைத் தூண்டும் வகையிலான உரையாடல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இந்த நிலையில் உள்ள மாணவர்களின் மனப்போக்கு எதற்குள்ளும் அடங்கிப்போகாத, எவருக்கும் மதிப்பளிக்காத சூழலை உருவாக்கிவிடுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களைத் தினம் தினம் எதிர்கொள்ளும் நிலை ஆசிரியருக்கு ஏற்படுகிறது என்பதைச் சமூகத்துக்கும் பெற்றோருக்கும் ஓர் ஆசிரியர் புரியவைப்பது எப்படி?
கரோனா பெருந்தொற்றுக் காலம், ஆசிரியரிடமிருந்தும் வகுப்பறையிலிருந்தும் பாடத்திலிருந்தும் மாணவர்களை வெகு தூரத்துக்கு விலக்கி வைத்துவிட்டது. கண்டிப்பில்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு சூழலுக்குள் மாணவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இன்றைய நவீன உலகில் மாணவர்கள் வலைதளங்கள், காணொளிகள் என ஏராளமானவற்றிலிருந்து ஆசிரியரிடம் பெற வேண்டிய அறிவையும் விளக்கத்தையும் பெற்றுவிடுகிறார்கள். வகுப்பாசிரியரின் துணை இல்லாமல் கற்றுக்கொள்ள முடியும் என்னும் சூழல்கூட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்திவிடுகிறது. இந்த விரிசல் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது.
- மகா.இராஜராஜசோழன், தமிழாசிரியர், சீர்காழி.