தி.மருதநாயகம் எழுதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் (14-03-22) வெளியான ‘கார்ல் மார்க்ஸ்: எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர்’ என்ற கட்டுரை சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. மார்க்ஸ் பிறந்த ஆண்டு 1816 என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் பிறந்த ஆண்டு 1818 என்பதுதான் சரி.
மார்க்ஸைப் பற்றி எழுதும்போது இரண்டு முக்கியமான அம்சங்கள் இடம்பெற வேண்டும்:
1."இதுவரையில் தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்கியானம் செய்தார்கள்; அதை மாற்றுவதே முக்கியமானது" என்று கூறிக் களத்தில் இறங்கியவர் மார்க்ஸ். 2.முதலாளித்துவத்தை ஆய்வுசெய்து அவர் கூறிய கருத்துகளில் முக்கியமானது உபரிமதிப்பு (surplus value) எவ்வாறு உருவாகிறது என்பது. தொழிலாளர்களின் உழைப்பு சக்தி எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை மார்க்ஸ் துல்லியமாக விளக்கியிருக்கிறார். தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவதை மார்க்ஸ் கையும் களவுமாகக் கண்டுபிடித்தார் என்று லெனின் கூறினார். இந்தக் கருத்தைக் கூறியதற்காக கார்ல் மார்க்ஸுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறினார்.
- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் - சிபிஐ(எம்).