கடந்த ஆகஸ்ட் 30 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான ‘கடல்வளத்தைக் கெடுக்கும் இறால் பண்ணைகள்’ கட்டுரை படித்தேன். அதில் உண்மைக்கு மாறாகச் சில தகவல்கள் இருக்கின்றன என்று கருதுகிறேன். கட்டுரையின் தொடக்கத்தில் இறால் பண்ணைகளுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐ.சி.ஏ.ஆர்.-சி.ஐ.பி.ஏ.-யின் திட்டப் பணியைக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார். கட்டுரை குறிப்பிடுவதுபோல் அல்லாமல் இறால் வளர்ப்புக்கு உவர்நீரால் பாதிப்புக்குள்ளான நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.பி.ஏ. நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் துணையுடன் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இறால் வளர்ப்பதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிந்தது. தமிழகப் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் முறை இறால் வளர்ப்பு மிகவும் உதவும். அறிவியல் முறைப்படி இறால் வளர்க்கும் பண்ணைகள் கழிவுநீரைச் சுத்திகரித்து, அதனால் ஏற்படக்கூடிய தீமைகளைக் குறைக்கின்றன. அதேபோல் இறால் பண்ணைக் கழிவுகளின் காரணமாகத் தோல்நோய்கள் ஏற்படுகின்றன என்று குற்றம்சாட்டுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. இறால் பண்ணைகளில் பெண்கள்தான் அதிகம் வேலைபார்ப்பதாகக் கட்டுரை குறிப்பிடுகிறது. இதுவும் உண்மைக்கு மாறானது. பெரும்பாலான இறால் பண்ணைகளில் மிகக் குறைந்த அளவிலேயே அடிப்படை வசதிகள் கிடைப்பதால் ஆண்களே அங்கு அதிகம் வேலைபார்க்கிறார்கள். கட்டுரையாளர் சில தரவுகளை உரிய இடங்களில் சரிபார்த்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
- கே.பி.ஜிதேந்திரன், இயக்குநர், ஐ.சி.ஏ.ஆர்.-சி.ஐ.பி.ஏ., சென்னை.