இப்படிக்கு இவர்கள்

தமிழ் மொழியின் வளர்ச்சி

செய்திப்பிரிவு

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிறைவேற்றிவருகிறார்கள் என்பதை ‘தமிழுக்கு ஓர் இருக்கை’ கட்டுரை உணர்த்தியது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரும்பாடுபட்டுவரும் ஜானகிராமன், சம்பந்தன் இருவரையும் அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகளோடு கட்டுரையாளர் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். உணர்ச்சி கோஷங்களைத் தாண்டி ஆயிரமாயிரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு, கோயில் ஆய்வுகள், பண்பாட்டு ஆய்வுகள், நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டுவருகிறார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஆண்ட்ரியா குட்டியர்ஸ் திருச்சியில் தங்கி தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை களஆய்வு செய்துவருகிறார். மலேயா பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த ஜனவரியில் கிடைத்தது. அந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்திய ஆய்வியல் துறையின் ஒரு பகுதியாகவே தமிழ்த் துறை செயல்படுகிறதே அன்றி, தனித் துறையாகச் செயல்படவில்லை.

சிங்கப்பூரில் இன்னும் ஒருபடி மேலாகத் தமிழ்த் துறைக்கு ஆதரவு கிடைக்கிறது. இந்திய மொழிகள் துறையாகவோ, தெற்காசிய மொழிகள் துறையாகவோ தமிழ் ஏற்றம் பெற்றிருந்தாலும் வருங்காலத்தில் அது போதுமானதாக இருக்க வாய்ப்பு குறைவு. தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று தமிழ்நாட்டுக்குள் சொல்லிக்கொண்டிருப்பதைவிட, உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்த் துறைகளைத் தனியே உருவாக்கி, உலகளாவிய அளவில் தமிழ் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளோடு புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுத்தர வேண்டும்.

அந்த நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள் எழுதிய தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அப்பல்கலைக்கழகங்களால் பதிப்பிக்கப்பட வேண்டும். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் தொடர்ச்சியும் உடைய நம் தமிழ் மொழியை வளர்க்க நாம் முயலாவிட்டால் வேறு யார் முயல்வது?

முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

SCROLL FOR NEXT