இப்படிக்கு இவர்கள்

பொருநையின் பெருமைகள்

செய்திப்பிரிவு

பாண்டிய மன்னர்களின் பெருமைமிகு துறைமுகம் கொற்கை. முத்துக்களுக்குச் சிறப்பு வாய்ந்தது.

பொதிகை மலையில் தோன்றி, செல்லும் வழியெல்லாம் வளம் சேர்த்து, கொற்கையில் தாமிரபரணி கலந்து நல்முத்து வளத்தையும் கொடுத்தது. அந்தக் கொற்கை இப்போது இல்லை. லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்ற நூலில் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை தாமிரபரணி நதி இலங்கை வரை பாய்ந்திருக்கிறது என்றும் அதனால்தான் முன்பு இலங்கைக்கு ‘தாம்ப்ரபரனே’ என்ற பெயர் இருந்திருக்கிறது என்றும் பதிவுசெய்திருக்கிறார். பாரதியாரும்…

’‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநை நதியென மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்ற பாடலில் தாமிரபரணியைப் பொருநை என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பொருநை நதியின் பெயரில் நெல்லையில் இன்றும் ‘பொருநை இலக்கிய வட்டம்’ என்ற தமிழ் இலக்கிய அமைப்பு ஞாயிறு தோறும் இடைவிடாது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பொருநை நதிக் கரையில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டையில்தான் ரசிகமணி டி.கே.சி. ‘‘வட்டத் தொட்டி’’ என்ற இலக்கிய அமைப்பைக் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பு நடத்தினார். பொருநையின் பெருமைகள் தொடர்ந்து வரட்டும்!

- இரா. தீத்தாரப்பன், தென்காசி.

***

‘தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி’ என்னைப் பழைய நினைவுகளுள் அமிழ்த்தியது. 73 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் வண்ணார்பேட்டையில் இருந்தோம். நான் சிறு பையன். என்னை ராஜா தாத்தா தாமிரபரணி ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிப் போவார்.

ஒரு சின்ன மண்டபம் இருக்கும். அதை ஒட்டிச் சலசலத்துக்கொண்டு ஓடும் நதி. ஸ்படிகம் போன்ற தண்ணீரில் அடியில் மணலும், சிறுசிறு கற்களும் கண்ணாடி வழியாகப் பார்ப்பது போல இருக்கும். அதுவே ஒரு ஆனந்தம்; குளிப்பதோ அதைவிட ஆனந்தம்! என்னை முதலில் குளிக்கவைத்து, துடைத்து, துண்டை நன்கு அலசிப் பிழிந்து என் இடையில்வேட்டி மாதிரி சுற்றிக் கட்டிவிட்டு, ஒரு தூணோரம் நிற்கவைத்து “இங்ஙனயே இரும்” என்று சொல்லிவிட்டு, தாத்தா குளிக்க ஆற்றுக்குள் இறங்குவார்.

அவர் நல்ல நிறம். தாமிரபரணி நீரில் முங்கி எழுந்ததும் அவர் மேனி கொள்ளைகொள்ள வைக்கும்! இப்போது யாராவது போய் அந்த ஜீவ நதியில் குளிக்க முடியுமா? ‘நடந்தாய் வாழி காவேரி’ நூலை மிக்க ஆர்வத்தோடு படித்தவன் நான். இப்போதும் நம் ‘தி இந்து’ இதழில் வரும் தாமிரபரணி பற்றிப் படிப்பதிலும் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன்!

- தீப. நடராஜன், தென்காசி.

SCROLL FOR NEXT