இப்படிக்கு இவர்கள்

அப்துல் கலாமானந்தர்

செய்திப்பிரிவு

இந்தியா தன் மக்கள் ஜனாதிபதியை, இந்தியாவுக்கு என உலக அரங்கில் தனி இடம் பெற்றுத்தந்த விஞ்ஞானியை இழந்திருக்கிறது. தன்னுடைய பேச்சாலும் செயலாலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உள்ளங்களில் ‘இந்தியா 2020’ தொலைநோக்குத் திட்டத்தை ஆழப் பதியவைத்துவிட்டார். இந்தியாவில் அனைவரும் அவரது இழப்பைத் தங்கள் குடும்பத்தில் ஒருவர் பிரிந்ததாக நினைத்து வருந்துகின்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த நூற்றாண்டில் நடந்ததில்லை. அவர் மறைந்தாலும் அவர் உண்டாக்கிய அதிர்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்பத்தை உண்டுபண்ணும்.

ஒரு முறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவின்போது கலாமின் சொற்பொழிவைக் கேட்கும் பேறு பெற்றேன். அவர் பேச்சிலுள்ள சக்தி, அவர் இருப்பினால் உண்டாகும் நல்லுணர்வு, அவர் பெயருக்கு உள்ள வசீகரம் ஆகியவற்றை உயிருள்ளவரை மறக்க முடியாது. அவர் சொற்பொழிவை ஒரு முறை கேட்டவர் அவருடைய கொள்கைகளை, அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவர்.

இந்தக் கால இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரை நேரில் காணவோ அவர் பேச்சைக் கேட்கவோ கொடுத்துவைக்கவில்லை. ஆனால், அதை ஈடுசெய்யும் வகையில் அப்துல் கலாம் இருந்தார்.

- ஜ. சிவகுரு, கீழவாசல்.

SCROLL FOR NEXT