‘தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி’ தொடர் நெஞ்சத்தில் ஈரம் கசிய வைப்பதாக உள்ளது. இன்று ஒரு ஊரே ஆற்றையும் மணலையும் காக்கப் போராடுவது விடுதலைப் போராட்டத்துக்கு இணையானது.
அரசையும் அரச நிறுவனங்களையும் மணல் மாஃபியாக்களையும் எதிர்த்து சின்னஞ்சிறு கிராம மக்கள் ஆற்றைக் காக்கத் திரண்டிருப்பது பலரால் பாராட்டப்படுகிறது. பொதுமக்களின் தொடர்ந்த போராட்டத்தால்தான், 2015 அக்டோபர் வரை ஆற்றில் மணல் அள்ள தடைத் வழங்கியது உயர் நீதிமன்றம்.
ஆனால், அந்தப் பகுதி மக்கள் அதற்கு விலையாகத் தங்களது நிம்மதியையும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கொடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுவதில்லை. இன்றும் பல்வேறு வடிவங்களில் கடல்போல் காட்சியளிக்கும் கொங்கராயக்குறிச்சி மணலைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம் நடந்த வண்ணமே இருக்கிறது. கொங்கராயக்குறிச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்கு இந்தத் தடை செய்யப்பட்ட மணல்தான் எடுக்கப்படுகிறது. கொங்கராயக்குறிச்சி- கருங்குளத்தை இணைக்கும் பாலம் வேலை இப்போது வேகமாக நடந்துவருகிறது. அதற்கும் இந்த மணல்தான் பயன்படுத்தப்படும் என்பதைவிட, மணல் திருடப்படும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதையெல்லாம் எதிர்த்தால் அரசின் புறக்கணிப்புக்கு ஆளாகிவிடுவோம் என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.
பசுமைத் தீர்ப்பாயம் திருவைகுண்டம் அணையை விவசாயிகளின் நலனுக்காகத் தூர்வாரச் சொல்ல, அதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அணையிலிருந்து 4 கி.மீ தொலைவில் மணல் அள்ள (தூர்வார) தொடங்கியிருக்கிறார்கள். அந்த இடம் தாழ்வான பகுதி. அதற்கு மேல் இருக்கும் கொங்கராயக்குறிச்சி மணல் பரப்பு மேடான பகுதி. அடுத்த வெள்ளத்தில் அந்த மணல் கீழே வந்துவிடும் என்பதால்தான் இந்தத் திட்டம். தவழ்ந்தாய் என்ற சொல்லைத் தாமிரபரணி ஆற்றோடு பொருத்தி வாசிக்கும்போது, வெட்டுப்பட்ட மனிதன் உயிருக்குப் போராடி தவழ்ந்து செல்வது போன்ற சித்திரமே என் மனத்தில் தோன்றுகிறது. உங்கள் தொடர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்த்துக்கள்!
- சாம்ராஜன்,கொங்கராயக்குறிச்சி.