இப்படிக்கு இவர்கள்

மதுவை மறுப்பதே தமிழர் மரபு!

செய்திப்பிரிவு

கம்பனின் பாடல்கள் மூலம் மதுவின் தீமைகளை விளக்கிய ‘கம்பனும் மதுவிலக்கும்’ கட்டுரை மிக முக்கியமானது.

அறிஞர்கள், தலைவர்கள் அனைவரும் மதுவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 உள்ளது. மதுவிலக்கு எங்கும் வெற்றி பெறவில்லை என்று கூறி, மதுக் கடைகளைத் திறப்பது சரியல்ல.

50 ஆண்டுகாலத் திட்டத்தின் மூலம் மதுவிலக்கை வெற்றிபெறச் செய்ய முடியும். நம்முடைய மதங்கள் அனைத்தும் மதுவைப் புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளன. பொய், கொலை, கள், களவு, காமம் என்பவை ஐம்பெருந் தீமைகளாகத் தமிழர்கள் கருதினர். பொய் அச்சத்தாலும், கொலை ஆத்திரத்தாலும், களவு வறுமையாலும், காமம் பருவத்தாலும் நேரிடலாம்.

ஆனால், கள் அருந்துவது இதில் எதனாலுமின்றி நிகழக் கூடியது. அதைவிடவும் முக்கியம், பாவச் செயல்களில் எதையும் செய்ய விரும்பாத ஒருவர், குடிக்கப் பழகிவிட்டால், காலப்போக்கில் பிற பாவச் செயல்களைச் செய்யும் பழக்கமும் எளிதில் வரக்கூடும். எனவே, மதுவிலக்கு குறித்த விரிவான செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். மதுவின் பிடியில் சிக்காமல் இனி வரும் தலைமுறையை மட்டுமல்லாமல், இந்தத் தலைமுறையையும் அப்போதுதான் காப்பாற்ற முடியும்.

- வ.லோ. சந்தோஷ், ஈரோடு.

***

மதுவின் தீமையைக் கம்பன் படம்பிடித்துக் காட்டுவதைத் தக்க தருணத்தில் கட்டுரையாக வடித்துள்ளீர்கள். இதே போல சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், கோவலன் கொல்லப்பட்டபோது “கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூடறுத்தது” என்று சொல்லி, காவலர்களுள் கல்வி அறிவற்ற ஒரு கள் குடியன் கோவலனைத் தன் வாளினால் வெட்டினான் என்கிறார். அரசுப் பணியில் இருக்கும் ஒருவன் குடித்ததால் செய்த தவறு அரசுக்கே களங்கம் விளைவித்தது என்று இளங்கோவடிகள் காட்டுகிறார்.

- இரா.தீத்தாரப்பன்,தென்காசி.

SCROLL FOR NEXT