ரசிகமணியின் 134-வது பிறந்த நாளில் அவருடைய பன்முகத்தன்மையைப் படம்பிடித்துக் காட்டியது கட்டுரை. பெரியார் குற்றாலத்துக்கு வரும் சமயம் ரசிகமணியைச் சந்திப்பது வழக்கம். ஒருமுறை பெரியார் ரசிகமணி இல்லத்துக்கு வந்தபோது, அவரிடம்
“மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்” என்ற குறளைச் சொல்லி,
‘'சோம்பல் உள்ளவனிடம் மூதேவி மலிந்து கிடக்கிறாள்; சோம்பல் இல்லாதவனின் காலில் திருமகள் நிறைந்திருக்கிறாள்” என்று விளக்கம் சொன்னதும் அதற்குப் பெரியார் “யாருமே இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கவில்லையே! உங்கள் விளக்கத்தால்
திருக்குறள் புதுப் பொலிவு பெறுகிறது!” என்று பாராட்டியுள்ளார். பெரியார் வந்தால் அவருக்கு திருக்குறளைச் சொல்லி விளக்கம் சொல்வார் ரசிகமணி என்பதை ‘அன்னப் பறவை’ என்ற நூலில் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பதிவு செய்துள்ளார்.
- இரா. தீத்தாரப்பன், மேலகரம்.