இப்படிக்கு இவர்கள்

சாதியும் சமூகமும்

செய்திப்பிரிவு

அமித் ஷா கலந்துகொண்ட கவுரவத்துக்கான மாநாடு சமூகநீதிக்கு எதிரானது என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இடஒதுக்கீடு இழிவானது என்று கருதும் ஒருவர், தனது சாதியைத் தெரிவிக்க வேண்டிய இடத்தில், ‘சாதியற்றவர்’ என்று குறிப்பிடுவதன் மூலம் பொதுப்பட்டியலில் இடம்பெற்று, இழிவிலிருந்து விலகி, மிக எளிதில் கவுரவமுடையவராக மாறிவிட வேண்டியதுதானே. அது அவரது உரிமையும்கூட. யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால், அதற்காக மனுவின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, சிலரைத் தீண்டத்தகாதவர்கள் என்று வெளிப்படையாகவே இழிவுபடுத்தியது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிறப்பிலேயே ஒருவரின் சாதி தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. மண உறவுகள் என்று வரும்போது சாதிச் சான்றிதழ்களையோ பள்ளிப் பதிவேடுகளையோ புரட்டிப் பார்த்து யாரும் சாதியை உறுதிசெய்துகொள்வதில்லை. தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகத்தான் உறுதிசெய்துகொள்கின்றனர்.

கிராமத்தில், ஒருவர் வசிக்கும் தெருவை அல்லது ஊரை வைத்தே அவரின் சாதியைத் தெரிந்துகொள்கின்றனர். பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு சில சமூகத்தினர், தங்களின் பிறப்பிடத்தை விட்டு விலகி, சொந்தக் கிராமத்தினர் எவர் கண்ணிலும் படாமல் வாழும்போதுதான் தங்கள் பிள்ளைகளின் சாதிப் பெயரைத் தவிர்த்துவிட்டு, படிவங்களில் ‘சாதியற்றவர்கள்’ என்று குறிப்பிட்டுப் பெருமைகொள்கின்றனர்.

அப்போதும்கூட, அத்தகைய பெற்றோரின் சாதி அடையாளத்தைத் தெரிந்துகொள்ள, சுற்றியிருக்கும் உடன் பணியாளர்களோ குடியிருப்புவாசிகளோ எடுத்துக்கொள்ளும் தீவிரமான முயற்சியைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனவே, சாதி குறித்த கேள்வியைப் பள்ளிச் சேர்க்கைக்கான படிவங்களிலிருந்து நீக்கிவிடுவதாலோ இடஒதுக்கீட்டை வேண்டாம் என்று தவிர்ப்பதாலோ உருவாக்கிவிட முடியாது. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலிருந்து சாதிய உணர்வை அழிக்கும்போதுதான் அது சாத்தியமாகும்.

- மருதம் செல்வா, திருப்பூர்.

SCROLL FOR NEXT