இப்படிக்கு இவர்கள்

பெரும்பான்மை நினைப்பதே நீதியாகி விடாது!

செய்திப்பிரிவு

பி.ஏ. கிருஷ்ணன், தன்னுடைய மொழிக் கொள்கைக் கருத்தை வெளியிடுவது தவறல்ல. ஆனால், மொழிக்காகக் குரல்கொடுப்பவர்களை ‘இனமான சிங்கங்கள்’, ‘மொழிமானப் புலிகள்’, ‘ட்விட்டர் போராளிகள்’ என்றெல்லாம் வர்ணித்திருப்பது தரமான விவாதத்துக்கு எள்ளளவும் துணை செய்யாது.

இந்தியாவிலுள்ள மாநிலங்கள் என்பவை அடிப்படையில் மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் ஆகும். அங்கு நிலவும் பொதுமொழி என்பது அத்தேசிய இனத்தின் தேசிய மொழியாகும். தேசிய இனத் தாயகத்தில் அத்தேசிய இனத்தின் தேசிய மொழியே அலுவல் மொழியாக இருப்பது உலக நடப்பு. தமிழகத்தைவிடச் சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 4 மொழிகளும் ஆட்சி மொழிகள். பெரிய நாடான கனடாவில் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய 2 தேசிய இன மொழிகளும் ஆட்சிமொழிகள்.

உலகத்தில் பல நாடுகளில் இவ்வாறான ஆட்சிமொழி நிலைமை இருக்கிறது. இந்தியா என்பது பல மொழி பேசுகிற தேசிய இனங்கள் இணைந்த ஓர் துணைக் கண்டம். இதில் தமிழர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஏழு கோடிப் பேர் இருக்கிறோம். இந்தப் பெருந்திரள் மக்களின் தேசிய மொழியை ஆட்சிமொழியாக ஏற்க மறுப்பதை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு நாடாளுமன்றத்தில் கிடைக்காது என்பதால், அதை வலியுறுத்துவதே தவறு என்று முடிவுசெய்துவிட முடியாது. இக்கோரிக்கையில் ஞாயமிருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இந்திக்காரர்கள் ஏற்பார்களா என்று பார்க்கச் சொல்வதே “நீ அடிமையாக இரு” எனத் தமிழர்களுக்குச் சொல்வதாகும்.

இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறுவார்களா என்பதற்கான சாத்தியங்களின் வெற்றி விகிதத்தைக் கணக்கிட்டு, சுதந்திரக் கோரிக்கையை காந்தியோ நேதாஜியோ முன்வைக்கவில்லை. அவர்கள் நீதியின் பக்கம் நின்று போராடினார்கள். பின் நீதி வென்றது என்பதே வரலாறு.

- கி.வெங்கட்ராமன், சிதம்பரம்.

***

தெளிவுபடுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

பி.ஏ.கிருஷ்ணனின் ‘இந்தியும் இந்தியாவும்’ கட்டுரையில் ‘இரண்டு ஆட்சி மொழிகள் இருக்கும்போதே இத்தனை பிரச்சினைகள் என்றால், 22 மொழிகள் இருந்தால் யார் என்ன சொல்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்’ என்ற அவருடைய கூற்றைப் பொய்யாக்கி உள்ளது, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம். ஐரோப்பிய ஒன்றிய அவையில் 23 உறுப்பு நாடுகள் உள்ளன.

736 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு 23 மொழிகள் பேசப்படுகின்றன. 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அனைவரது மொழிக்கும் இணையான கவுரவம் வழங்கப்படுகிறது. இத்தகைய வெற்றிக்கு அணுகுமுறையே காரணமாகும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்தியாவில் 22 மொழிகளை ஆட்சி மொழிகளாகப் பயன்படுத்துவதில் பெரிய தடை இருக்க முடியாது என்றே ஐரோப்பிய ஒன்றியம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சில இடையூறுகள் தற்காலிகமாக ஏற்படக்கூடும். ஆனால், தேசிய இனங்களின் உரிமையைவிட அவை பெரிதல்ல.

- கண. குறிஞ்சி, ஈரோடு.

SCROLL FOR NEXT