சமதர்ம பாதையில் செல்ல நினைக்கும் அரசுகள் அதன் பாதையில் மேடு பள்ளம் இருந்தால் மேட்டைத் தூர்த்து பள்ளத்தை நிரப்பிச் சமன் செய்வதுதான் சரியான நடைமுறை.
அது நியாயத்துக்கும் நீதிக்கும் எதிரானது அல்ல. ஒரு சமூகத்தின் பிரதிநிதி என சொல்லிக்கொள்ளும் ஒரு நபர், “இனி, இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வேண்டாம்” என்று கூறுவது வேதனை கலந்த வேடிக்கையாக இருக்கிறது.
அவர் அந்தச் சமூகத்தின் பிரதிநிதிதானா என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், அவர் இடஒதுக்கீடு வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டும் தெளிவு. இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுவதன் மூலம் தனக்கு அரசியலில் இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற நப்பாசையில் இருக்கிறார் போலும்.
“இந்த இடத்தில் நம் கவனம் கோரும் இன்னொரு மையம், சாதிய அடிப்படையில் தமக்கான அங்கீகாரங்களைப் பெற விரும்புவோர் எங்கே கடைசியில் போய் நிற்கின்றனர் என்பதும், யார் அவர்களை முதலில் சுவீகரித்துக் கொள்கின்றனர் என்பதும். ஆக, சாதிய பீடங்கள் அப்படியே நிற்கின்றன.
தம் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ள காலத்துக் கேற்ப புதுப்புது பூசாரிகளை அவை உருவாக்குகின்றன” என்ற கட்டுரை யாளரின் சொற்கள் கல்லில் செதுக்கி வைக்க வேண்டிய ஒன்று.
பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு),மதுரை.