பள்ளியிலேயே தொடங்கட்டும் ரமணி பிரபா தேவி எழுதிவரும் ‘பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு’ தொடர் பல அரிய தகவல்களை அளிக்கிறது. பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வும், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அக்கறையும் வெளிப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். முக்கியமாக, பள்ளிக் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பிளாஸ்டிக்கின் விளைவுகளை இத்தகைய கட்டுரைகள் மூலம் மனதில் பதிய வைக்க வேண்டும்.
- ஆலிஸ் பிரேம் குமார், மின்னஞ்சல் வழியாக...
ஆ.சிவசுப்பிரமணியன்: தமிழுக்காகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஆளுமை
அக்டோபார் 21 அன்று வெளியான ‘ஆ.சிவசுப்பிரமணியனுக்கான டாக்டர் பட்டம் தமிழுக்கான கௌரவம்’ தலையங்கம் வாசித்தேன். பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது மிக முக்கியமான விஷயம். கல்வித் தளத்தில் பெருமளவு வெளிச்சம் படாத நாட்டார் வழக்காற்றியல் துறையைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. பேராசிரியரோடு கொஞ்ச காலம் பணியாற்றக் கிடைத்த தருணங்கள் என் வாழ்வில் அற்புதமானவை.
தூத்துக்குடி தபால் தந்தி ஊழியர் குடியிருப்பில் அவரது வீடு இருந்த சமயத்தில், அவரது எழுத்துகளை தட்டச்சுசெய்து கொடுக்கவும், ‘புதிய ஆராய்ச்சி’ காலாண்டிதழுக்காக அவரது கட்டுரைகளை வாங்குவதற்காகவும் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். சிறு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாத சூழலில்கூட தமிழுக்காகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தார்.
புத்தகங்கள் நிரம்பிவழியும் அவரது மாடி வீட்டு அறை எனக்கு மிகவும் பிடித்தமான இடம். ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்’, ‘பனைமரமே! பனைமரமே!’ போன்ற புத்தகங்கள் வெளிவரும்போது அவரோடு இருந்திருக்கிறேன். அவரது எழுத்துகள் ஒவ்வொன்றும் எளிய மக்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. வரலாற்றின் பக்கங்களில் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை ஆதாரங்களோடு எடுத்துவைக்கும் அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் நுட்பமானவை, போற்றிப் பாதுகாப்பதற்குரியவை. அவரின் படைப்புகளை நம் வருங்காலச் சந்ததிகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியது நம்முடைய கடமை.
- வெ.அருண் பாரதி, மின்னஞ்சல் வழியாக...