அட்டைப் பெட்டியை முகமூடியாக்கி மாணவர்கள் தேர்வு எழுதிய காட்சி கல்வியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நீட் தேர்விலும் மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள், கேவலப்படுத்தப்பட்டனர். 10, 12 ஆண்டுகள் கல்வி பெற்றவர்க்கு நேர்மையை வளர்க்கவில்லை என்றால், கல்வி அமைப்பின் தோல்வி என்பது வெளிப்படை. முறைகேடுகளில் ஈடுபடுவோர் மிகச் சிலரே.
இத்தகைய கெடுபிடிகளால் ‘நேர்மை வெற்றியைத் தராது, குறுக்குவழியே சரி’ என்ற எண்ணம் மாணவரிடம் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுத் தேர்வே மாணவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்பதே தேர்வு ஒழுங்கீனங்கள் அதிகரிக்கக் காரணம். தேர்வுச் சீர்திருத்தம் தேவையே தவிர, அட்டைப் பெட்டி முகமூடிகளல்ல; தேர்வு முறைகளில் அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது.
- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.
பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் பதைபதைப்பிலேயே இருக்கிறார்கள் முகம்மது ரியாஸின் ‘பொறியியல் மாணவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னுள்ள ஆசிரியர்கள் விவகாரம்!’ கட்டுரை படித்தேன். பொறியியல் கல்வியின் தரம் குறைந்துவரும் இந்நேரத்தில், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:15 என்று இருந்ததை 1:20 என்று ஏஐசிடிஇ மாற்றியுள்ளது.
ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்து, தனியார் கல்லூரிகள் லாபம் அடையவே இது வழிவகுக்கிறது! ‘கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பழைய சொல்லாடல். இன்று நடப்பது வியாபாரம்கூட அல்ல, மோசடி.’ என்று கட்டுரையாளர் கூறியிருப்பது பேருண்மை.
இதில் தனியார் சுயநிதிக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. நான் பணியாற்றுகிற கல்லூரியில் இந்த 2019-2020 கல்வியாண்டு தொடங்கிய பிறகு, ஐந்து எம்இ பாடப் பிரிவுகள் மற்றும் எம்சிஏ சுயநிதிப் பாடப் பிரிவு ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டு, அப்பிரிவுகளில் பணியாற்றிய பேராசிரியர்களில் 21 பேர் வலுக்கட்டாயமாக ஒரே நாளில் பணிஅகற்றம் செய்யப்பட்டனர்.
அதனால், ஏற்பட்ட தொடர் மனஅழுத்தம் காரணமாகப் பேராசிரியர் பிரவீன் மாரடைப்பில் இறந்துபோனார். பாடப் பிரிவுகள் மூடப்பட்டது போக ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் காரணமாகவும் அடுத்தடுத்த வெளியேற்றப் பட்டியல் எப்போது வருமோ என்று ஆசிரியர்கள் கதிகலங்கி உள்ள நிலையில், தரமான கல்விச் சூழலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
- பா.மனோகரன், கல்லூரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்புத் தலைவர்,
தியாகராசர் பொறியியல் கல்லூரி.