இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: பயன்தரும் மகாராஷ்டிரத் தொடர்

செய்திப்பிரிவு

பயன்தரும் மகாராஷ்டிரத் தொடர்

தற்போதைய இளைஞர்கள் தாங்கள் வாழ்கிற பகுதியைத் தவிர, இந்தியாவில் இருக்கிற பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பற்றி பொதுவான அறிவைப் பெறாமல் இருக்கிறார்கள். இது வருத்தத்துக்குரியது. அவ்வகையில், மகாராஷ்டிரம் தொடர்பாக ஆசை எழுதிவரும் தொடரானது அரசியல் மட்டுமல்லாமல், அந்த மாநிலத்தின் அடிப்படை விவரங்கள் மற்றும் எப்படி அந்த மாநிலம் வளர்ந்துவருகிறது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதுகிறார். இதுபோன்று எல்லா மாநிலங்களைப் பற்றியும் ‘இந்து தமிழ்’ கட்டுரை வெளியிட வேண்டும். நம் மாணவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அது அமையும்.

- நிவ்ரிதி ஜவஹர், ஐஏஎஸ் (ஓய்வு).

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்

கட்டுப்பாடுகள் அதிகமானால் வளர்ச்சி குன்றிவிடும் என்பது வரலாற்று உண்மை. கடந்த சில ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்களின் இயக்கம் மிக அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அலுவலர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகள் மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

விதிகள்படி தலைமையாசிரியர் ஆற்ற வேண்டிய பணிகளெல்லாம் இன்று இயக்குநர் செய்வதால், இயக்குநரது தலையாய பணியான அரசுக்குத் திட்டமிடுதல் தொடர்பாக ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பை ஆற்ற இயலாது போய்விட்டது. விடுமுறை விடுதல், பள்ளி நேரம், பருவத் தேர்வு நடத்துதல் போன்ற அனைத்துச் செயல்களும் இயக்ககமே மேற்கொள்கிறது. கல்வித் துறையின் முக்கியமான பணியான பள்ளி ஆய்வுகள் முழுமையாகவும் ஒழுங்காகவும் நடைபெறாதுபோயிற்று.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.

மகாராஷ்டிர அரசியல் வரலாற்றைப் பேசும் கட்டுரைகள்

இந்தியாவின் ஏனைய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைப் போல மகாராஷ்டிரத் தேர்தலை அணுக முடியாததற்கான காரணங்களையும், நாட்டின் வணிக நகரமான மும்பை, அம்மாநில முதல்வரின் கீழே வருவதால் அவர் தேசிய அரசியலிலும் கோலோச்சும் வாய்ப்பு பெறுவதையும் சிறப்பான முறையில் அலசியது ‘வணக்கம் மகாராஷ்டிரம்’ கட்டுரை. அதைத் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் கட்டுரைகள் வழியே மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் வரலாற்றையே தெரிந்துகொள்ள முடிகிறது.

- புண்ணியகோட்டி சேது, சென்னை.

புத்தகங்களைப் பட்டியலிடும் கலாச்சாரம் உருவாக வேண்டும்

‘நூல்வெளி’ பகுதியில் கண்ணன் எழுதிய ‘இளையர் ஏன் வாசிக்க வேண்டும்?’ கட்டுரை வாசித்தேன். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு ஒதுக்கிவைக்கப்படுகிறது என்பது உண்மையே. இன்றைய இளைய தலைமுறையினர் எதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர் என்பதும் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். திகில் கதைப் புத்தகங்களும், நேரத்தை வீணடிக்கும் பொழுதுபோக்குப் புத்தகங்களும் பெரும்பாலான இளைஞர்களால் வாசிக்கப்படுகின்றன.

அதுதான் இலக்கியம் என்றுகூடப் பலரும் கருதும் நிலை உள்ளது. ஆக, இளையர்களுக்கு முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் அரசியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் போன்ற பிரபலங்களெல்லாம் ‘நான் என்னென்ன புத்தகங்களை வாசித்தேன்’ என்பதைப் பட்டியலிடும் வழக்கம் உள்ளது. உதாரணமாக, பில் கேட்ஸ் ஒவ்வொரு கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் எந்தெந்த நூல்களை வாசித்தேன் எனப் பட்டியலிடுகிறார். தாங்கள் ஆதர்சமாக நினைக்கும் ஆளுமைகள் பரிந்துரைக்கும் புத்தகங்களைத் தேடிச்சென்று வாசிக்கிறார்கள். நம் சமூகத்திலும் இத்தகைய கலாச்சாரம் உருவாக வேண்டும்.
- மருதூர்.செம்மொழிமணி, வேதாரண்யம்.

SCROLL FOR NEXT