தமிழர்கள் நாண வேண்டிய விஷயம்
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30கோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆகும் பயணச் செலவை, தமிழக அரசு ஏற்க மறுத்ததாக செப்டம்பர்-12 அன்று வெளியான செய்தி, தமிழ்ப் பண்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வருத்தமுறச் செய்தது.
என்ன காரணம் கூறினாலும் ஏற்பதற்குக் கடினமானதாகவே இருக்கிறது. இது மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; தமிழர்களின் கலை, பண்பாடு இவற்றோடு பின்னிப் பிணைந்த விஷயம். அந்தச் செலவை இதுநாள் வரை கலைப் பொக்கிஷமாகக் காத்துவந்த ஆஸ்திரேலியக் கலைக்கூடப் பதிவாளரே தனது செலவில் அனுப்பி வைத்தது தமிழர்களாகிய நாம் நாண வேண்டிய விஷயம்.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
புவியின் வெப்பநிலையை இப்போது இருக்கும் அளவைவிட 2 செல்சியஸ் குறைக்க வேண்டும் என்ற பாரீஸ் சர்வதேச மாநாட்டில் ஒப்புக்கொண்ட உலக நாடுகள், கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் எந்த நாடும் இதைத் தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் புவி வெப்பம் அதிகரிக்கும் சூழலே உருவாகி உள்ளது. இது தெரிந்த பிறகும் உலக நாடுகள் அலட்சியம் காட்டுவது வேதனை. இந்நிலையில், இந்தியா 250 கோடி டன் கரியமில வாயுவை விரட்ட குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் வளர்க்க அழைப்பு விடுத்திருப்பது ஆறுதலான விஷயம். இதில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அக்கறையோடு செயல்பட்டு காடுகள் செழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- இரா.முத்துக்குமரன், அற்புதபுரம்.
பரிந்துரையை விரைந்து நிறைவேற்றுங்கள்
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்த பழங்குடி மாணவர் சந்திரன், மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் பழங்குடிப் பிரிவில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் தொழிற்கல்விப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் தவிக்கும் நிலையை ஆகஸ்ட்-20 அன்று நடுப்பக்கத்தில் கவனப்படுத்தியிருந்தீர்கள். இது தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் சென்னையில் செப்டம்பர்-12 அன்று நடத்திய பொது விசாரணையில் புகார் அளித்திருந்தேன்.
தேசிய மனித உரிமை ஆணையம், தொழிற் கல்விப் பிரிவில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைத் தளர்த்தி, கால்நடை மருத்துவப் படிப்பில் சந்திரனைச் சேர்த்துக்கொள்ளுமாறும், அவரைப் பின்பற்றி மற்ற பழங்குடி மாணவர்கள் கல்வி கற்கவும் தூண்டுதலாக இருக்கும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை விரைந்து நிறைவேற்றுமா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்?
‘சுடர்’ எஸ்.சி.நடராஜ், சத்தியமங்கலம்.