வேட்டையாடி ஊனுண்ட நாடோடி மனிதன், வேளாண் உணவுக்குத் தன்னைத் தயார்படுத்திய நாகரிக மனிதனாக உருவாக ஆரம்பித்தபோதே உணவுபற்றிய நல்லது கெட்டது பிரிவினை ஆரம்பித்துவிட்டது.
உணவு, மனிதனின் சக்திக்கான பொருள். அது தனிமனிதனின் உடலுழைப்பு, தேவை, விருப்பத்துக்கேற்ப மாறுபடும். சைவ மேட்டிமை என்பது தேவையின்பால் ஏற்பட்டதல்ல. அது மற்ற உயிரினங்கள் மேல் ஏற்பட்ட அன்பின்பாலும் ஏற்பட்டதல்ல.
இங்கு உணவுப் பழக்கம் ஒரு வகையான குழப்பத்துக்கு நடுவே காணப்படுகிறது. உடல் தேவைக்கும், பொருளாதாரத்துக்கும், மதத்துக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.
‘கக்கா முட்டை’ பொருளாதார முரண் பாட்டில் ஏற்பட்ட உணவு ஆசையை ஆதாரமாகக் கொண்ட திரைப்படம். ஏழையின் அமெரிக்க மைதா தோசையின்பால் ஏற்பட்ட ஆசைக்கும் பணக்காரர்களின் தேவைக்கும் ஏற்பட்ட வர்க்கப்போராட்டம்.
- விளதை சிவா, சென்னை.
வசூலும் விருதும்
‘காக்கா முட்டை’, ‘36 வயதினிலே’ போன்ற நல்ல கதை அம்சமுள்ள தமிழ்த் திரைப்படங்கள் தற்போது வெற்றிபெற்றுவருவது, வேறுபட்டு தனித்து சிந்திக்கும் கதையம்சத்தையும் அதன் இயக்கத்தையுமே சார்ந்திருக்கிறது. பெரும்பாலும், தமிழில் எடுக்கப்படும் படங்கள் வர்த்தகரீதியில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதிக செலவில் உருவாக்கப்பட்டுவருகின்றன. ‘காக்கா முட்டை’ போன்ற மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களால் மட்டும்தான் வசூல்ரீதியாக வெற்றிபெறுவதுடன் விருதுகளையும் குவிக்க முடியும்.
- எம். ஆர் லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.