வே.வசந்தி தேவி எழுதிய ‘வித்தகத் தந்திரங்கள்’ கட்டுரையை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 24.6.15 அன்று படித்தேன்.
தனியார் பள்ளிகளில் தரமான கல்வி என்பதெல்லாம் பொய் என்று கட்டுரையாளர் மிகச் சரியாகக் கூறியுள்ளார். காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆள்வோர்தான் தீர்மானிக்கிறார்கள்.
அப்படித்தான் புதிய காலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்துக்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.
நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவை இல்லாத ஒன்று. தாய்மொழிதான் சிந்தனையின் மொழி. அதனால் தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கபூர்வமான அறிவு கிட்டும். அந்நிய மொழிக் கல்வி சுமை மிக்கது. மேலும், மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்வியும் அதைக் கற்றுத்தரும் அரசுப் பள்ளிகளும்தான்.
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும்.
- சேரலாதன்,தர்மபுரி.