இப்படிக்கு இவர்கள்

நெருப்பின் இருப்பு சமயவேல் கவிதைகள்

செய்திப்பிரிவு

இருப்பின் மீது வெறுப்பைச் சிந்தும் சோகக் கவிதைகளுக்கிடையே சமயவேலின் கவிதைகள் பிரமிப்பை உண்டாக்குவன.

அவரது ‘அகாலம்’ கவிதைத் தொகுப்பு தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்பு. தென்கொரிய மூலத்திலிருந்து டன் மீ சோய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தன் குறித்த மொழிபெயர்ப்பை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்து அவரது ‘அகாலம்’ வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.

விடுமுறை வேண்டும் உடல் எனும் கவிதையில், ‘எதைப் பற்றியும் கவலையில்லை உடலுக்கு, தன்னைப் பற்றியே பெருங்கவலை கொள்கிற உடல், முடிந்தபோதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது’ என்று காட்சிப்படுத்துகிறார்.

நம் ஆசிகளால் தன் குழந்தைத்தனமான நாட்களை இழந்துகொண்டிருக்கும் குழந்தைகள்குறித்துத் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். ‘கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர்மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன்’ எனும் வரிகள் அற்புதமானவை.

அடிவானத்தின் உயிர்ப்பு மரிப்பதில்லை ஒருபோதும் என்ற வரி அவரது அழகான சொல்லாட்சிக்குச் சான்று. அம்பாசிடர் கார் அவர் பார்வையில் வெள்ளை ஆமை! கவிதை வாழ்வை உரித்துவைத்து அப்படியே நிதர்சனமாய் மொழி எனும் வெளியில் உலர்த்தி வேடிக்கை பார்க்கிறது.

காற்றின் பாடலோடு கவிதை எழுதும் சமயவேலின் கவிதைகள் தென்றலாகவும் வாடையாகவும் ஒருசேரத் தூக்கியடிக் கிறது. நிஜம், நிஜமான சாயலோடு மட்டும்தானே இருக்க முடியும்.

- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

SCROLL FOR NEXT