இப்படிக்கு இவர்கள்

பயனற்ற சுமை

செய்திப்பிரிவு

அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாற்றும் குரல்கள் வழக்கம்போல் எதிரொலிக்கின்றன. இருவகைப் பாடத்திட்டங்களையும் பாராமலேயே இக்கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

சமீப காலங்களில் தமிழ்நாடு பாடத்திட்டக் குழுக்களிலும் பாடநூல்கள் தயாரிப்பிலும் கல்லூரி ஆசிரியர்கள் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும்போது, கல்லூரிகளின் தேவையை முன்னிறுத்தியே பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. குறை, பாடத்திட்டத்தில் இல்லை;

வகுப்பறைக் கற்பித்தலில்தான் உள்ளது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளின் முதன்மையான நோக்கம் வடிகட்டலே. மாணவரது உள்ளார்ந்த இயற்கை அறிவைக் காண உதவாது.

சிறப்புப் பயிற்சி மையங்களில் பெறும் அதிநுட்பப் பயிற்சியே தேர்வில் வெற்றிக்குத் துணை நிற்கும். சென்னை ஐ.ஐ.டி-யில் உள்ள அனைத்து இடங்களும் தமிழ்நாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டாலும், ஆயிரத்துக்குட்பட்ட மாணவரே பயன்பெறுவார்கள். எனவே, நமது முதற்பணி நமது கல்லூரிகளில் பத்து சதவீதத்தையாவது ஐ.ஐ.டி மற்றும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் தரத்துக்கு உயர்த்துவதாக இருக்க வேண்டும். மீத்திறன் பெற்ற பேராசிரியர்களை இனம் கண்டு இங்கும், வெளிநாடுகளிலும் சிறப்புப் பயிற்சி பெற வகை செய்ய வேண்டும்.

அறிவாற்றலையும், சிந்தனைத் திறனையும், சமூகப் பார்வையையும் வளர்க்கும் வண்ணம் நம் வகுப்பறைகளைச் சீரமைக்க வேண்டும். வெறும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைக் காப்பியடிப்பதன் மூலம் மாணவர் மீது சுமை கூடுமே தவிர, வேறொரு பயனும் விளையாது.

- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,சென்னை.

SCROLL FOR NEXT