வற்றாத ஜீவநதியாம் பவானி பாயும் கரையில் அமைந்துள்ள எங்கள் மேட்டுப்பாளையம் தண்ணீர்த் தட்டுப்பாடே அறியாத ஊர். தினமும் தண்ணீர் விநியோகம் இங்கு உண்டு. இன்றும்கூட இங்கிருந்துதான் தண்ணீர் எடுத்து திருப்பூர் வரை விநியோகிக்கப்படுகிறது.
ஊர்வாசிகள் ஒவ்வொருவர் உதிரத்தோடும் கலந்து நிற்கிறது பவானி நதி. என் பால்ய வயதுகளில், வெள்ளம் கரை புரண்டோடும் மழைக் காலங்களில் பாலம் தொட்டுச் செல்லும் பெருக்கை அச்சத்தோடு பார்ப்பதும், மூழ்கும் படிகளின் எண்ணிக்கையைக் கணிப்பதும் இன்னமும் மனதின் ஓரத்தில் சந்தோஷம் தருபவை.
வறண்டுபோனதாக வரலாறே இல்லாத இந்த ஜீவநதியிலிருந்து மின்உற்பத்திக்கு 2007-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு, ஊரையொட்டிய சமயபுரம், கரட்டு மேடு, வெள்ளிப்பாளையம் பகுதிகளில் கதவணைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தடுப்பணைகள் மூலம் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்தத் தேக்கத்தால் நீர் மட்டமும், ஆழமும் அதிகரிப் பதோடு, குப்பையும் கூளமும் மிதக்கும் நிலையில் ஆற்றைப் பார்க்க அசுத்தமாக உள்ளது, டர்பைன்கள் சுழல்வதற்குக் கதவணைகள் திறக்கப்பட்டு தேக்கி வைத்த நீரை விடுவித்ததும், பாய்ந்தோடிப் போகும் பவானி நதி இறுதியில் ஆங்காங்கே தரை தெரிய காட்சியளிக்கிறது.
ஏழெட்டு மெகாவாட் மின்சாரத்துக்காக ஒரு நதியையே பாழ்படுத்தி நிற்கிறோம். வறண்டு போயிருக்கும் பாலாற்றின் கரையருகே குடிபெயர்ந்த பிறகுதான் கூப்பிடு தூரத்தில் இருந்த ஜீவநதியின் அருமை எனக்குப் புரிந்தது. நதியால் மின்சாரம் கிடைக்கும். மின்சாரத்தால் ஒளி கிடைக்கும், இயல்பாய் கரை புரளும் நதி கிடைக்குமா?
- ஏ.எம்.நூர்தீன்,சோளிங்கர்.