இப்படிக்கு இவர்கள்

அறிவியல் புனைவின் ஆசான் சுஜாதா

செய்திப்பிரிவு

கூர்மையான மொழி நடையால் பாமர வாசகனையும் எளிதாக எட்டியவர் சுஜாதா.

பனிச்சறுக்கில் வழுக்கிச் செல்லும் லாவகம் அவரது சுருக்கமான உரைநடைக்கு உண்டு. அம்பலம் எனும் இணையப் பெருவெளியில் இறங்கி, அவர் எழுதிய பத்திகளும் அறிவியல் புனைவுகளும் இன்றும் புதுமையானதாகவே வாசகனுக்குக் காட்சிதருகின்றன. அவரது பாதிப்பால் வாசகர்களாய் இருந்தவர்கள் தமிழில் வலைப்பூ படைப்பாளிகளாக உருவாயினர்.

சிறு பத்திரிகைகளை வெகுசன வாசகர்களிடம் கொண்டுசென்ற பெருமை அவருக்கு உண்டு. குறுந்தொகைப் பாடல்களைப் புதுக்கவிதைகளாக்கி அவர்செய்த முயற்சிகள் புதுமையானவை. ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ நூல் திவ்யசூரி சரித்திரத்தையும் பெரியவாச்சான்பிள்ளையையும் பாமரவாசகன் வரை கொண்டுசென்றது.

மரபணுக்களைப் பற்றியும் கணினி பற்றியும் அவரளவுக்கு எளிமையாகச் சொன்னவர்கள் யாருமில்லை. அவர் எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் போன்ற சிறுகதைகளின் கருவும் உருவும் புதியன. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தீவிர இலக்கியத்துக்கும் வெகுசன இலக்கியத்துக்கும் பாலம். அவரால் அடையாளம் காட்டப்பட்ட இளைஞர்கள் இன்று தமிழ் இலக்கியத்தில் புதிய இலக்கிய வகைகளின் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள்.

- சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.

SCROLL FOR NEXT