இப்படிக்கு இவர்கள்

அறம் சார்ந்த கனவு பலிக்குமா?

செய்திப்பிரிவு

அரவிந்தனின் ‘’ கட்டுரை பகுத்தறிவுச் செறிவுடன், சார்பற்ற - ஆனால், அற வழிச் சலனமுடைய சாமானியனின் இயலாமையையும் பிரதிபலிக்கிறது.

நீதி கிடைத்ததா என்பதைவிட, நீதியை நிலைநாட்ட, கிடைத்துள்ள தகவல்/தடயங்கள் மூலம் சட்டரீதியாக அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுவிட்டன என்ற தீர்மானமான, துல்லியப் பார்வையை மக்கள் பெறுவதும் நீதி பரிபாலனத்தின் ஓர் இன்றியமையாத அங்கம்.

இந்த வழக்கு அந்த நிலையை இன்னமும் எய்தவில்லை. கட்டுரையாளர் கோடிட்டுக் காட்டும் ‘அறம் சார்ந்த கனவு’, மகாத்மா காந்தி இது தொடர்பாகக் கூறியுள்ளதையும் நினைவுபடுத்துகிறது: “மனசாட்சியைப் பொறுத்தவரை, பெரும்பான்மை சார்ந்த சட்டப் போக்குக்கு இடமளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.”

- வீ. விஜயராகவன்,சென்னை.

***

இந்த 18 வருடங்களாக இந்த ஒரு வழக்குக்காக மட்டுமே செலவிடப்பட்ட நேரம், பொருள், மனித உழைப்பு, சட்டத் திறமை இத்யாதிகளை, விசாரிக்கப் படாமலேயே சிறையில் நசிந்துகொண்டிருக்கும் 3 லட்சம் விசாரணைக் கைதிகளுக்காகச் செலவிட்டிருந்தால், சில குடும்பங்களிலாவது விளக்கு எரிந்திருக்குமே என்ற கேள்வி எழுந்தது.

முன்னாள் காவல் துறை அதிகாரி கிரண்பேடி கூறியிருப்பதைப் போல, உண்மையிலேயே நம் நாட்டு நீதியமைப்பு இந்தியாவின் பருவ மழையைப் போல எப்போதும் பொய்த்துப் போகிறதா? சாமானியனுக்கும் சரியான, சமமான நீதி கிடைக்க எந்தக் கடவுளிடம் வரம் கேட்க வேண்டும்?

- இரா. இராமலிங்கம்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT