இப்படிக்கு இவர்கள்

சாமானிய மக்களுக்கு நீதி இல்லை

செய்திப்பிரிவு

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு, குடிபோதையில், ஓட்டுநர் உரிமம் இல்லாது காரை ஓட்டி, ஒருவரைப் பலியாக்கி, நால்வரைக் காயப்படுத்திய குற்றத்துக்காக, நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து, ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற நட்சத்திர நடிகர் சல்மான் கான், உயர் நீதிமன்றம் மூலம் அசுர வேகத்தில் ஜாமீன் பெற்றதுகுறித்து, ரசிகர்களின் பார்வையில், ஞாயிறு களத்தில், எழுதிய கட்டுரை அர்த்தம் பொதிந்தது.

கட்டுரை வரிகள் ஒவ்வொன்றும், பண பலம் படைத்த சினிமா பிரபலங்களுக்கு நீதி என்றுமே மாறுபடும் என்பதைப் பறைசாற்றியது மட்டுமல்லாது, சாமானியனுக்கு நீதி, ஒருபோதும் கிடைக்காது என்பதையும் நெத்தியடியாகச் சொல்லியது.

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

***

சல்மான் கானுக்கு 13 வருடத் தாமதத்துக்குப் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பும், ஒரே நாளில் வழங்கப்பட்ட மின்னல் வேக ஜாமீனும் இந்திய ஜனநாயகத்தின் ஓட்டைகளையும், பிரபலங்களின் அசைக்க முடியாத செல்வாக்கையும், சாமானியனின் உயிர் அற்பமானது என்பதையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. நம் நாடு சாமானியனுக்கானதில்லை என்ற உண்மை, விரக்தியின் விளிம்புக்கே நம்மைத் தள்ளிவிடுகிறது!

- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

***

‘இனி, ரசிகர்கள் நிம்மதியாகத் தூங்கலாம்’ என்கிற கட்டுரையைப் படித்து முடித்ததும் மனம் கனத்தது. எதிரில் அமர்ந்திருக்கும் குற்றவாளிகளைப் பார்க்காமல் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அன்றுதான் நீதிக்கு விமோசனம். தாமதப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே தெரிகிறது. இனி, இந்த நாட்டில் சட்டம் - ஒழுங்கு எதுவும் சமூகத்தின் உயர் நிலையில் உள்ளவர்களுக்கு இல்லை போலும். அதற்கு அவர்கள் தலை வணங்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.

SCROLL FOR NEXT