இப்படிக்கு இவர்கள்

மகிழ்ச்சி விற்பனைக்கானதல்ல

செய்திப்பிரிவு

‘மகிழ்ச்சி விற்பனையின் காலம் இது! என்ற கட்டுரையில் மகிழ்ச்சியை விற்பவர்களின் மோசடித்தனத்தைத் தெளிவாக அம்பலப்படுத்தியிருந்தார் டிம் லாட். குடிமக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதற்கே திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறோம் என்கின்றன அரசுகளும் அதிகார வர்க்கங்களும்.

நுகர்வோரை மகிழ்விப்பதற்கே உற்பத்திசெய்து குவிக்கிறோம் என்று நீட்டி முழங்குகின்றன உற்பத்தி நிறுவனங்கள். இங்கு எல்லாமே மக்களின் மகிழ்ச்சிக்காகவே நடைபெறுகின்றன என்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, நமது நேரடி அல்லது மறைமுக ஒப்புதலுடன்தான் எல்லா வகையான சுரண்டல்களும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

நாமும் மழுங்கடிக்கப்பட்ட மூளைகளுடன் நமது குழந்தைகளிடமும் குடும்ப உறுப்பினர்களிடமும் மகிழ்ச்சிக்காக அதீத எதிபார்ப்புகளை உருவாக்கிக்கொண்டு நம்மை நாமே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

சுயத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.. இதிலிருந்து எப்போது நாம் விடுபட முயலுகிறோமோ அப்போதே மகிழ்ச்சியை விற்பவர்களும் நம்மைவிட்டு அகலத் தொடங்குவார்கள்.

எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்விக்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியவை என்பதை உணரும் போதுதான் மகிழ்ச்சி விற்பனைக்கான தல்ல என்பதும் தெரிய வரும்.

- மருதம் செல்வா,திருப்பூர்.

SCROLL FOR NEXT