‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றார் பாரதி. அதில்கூட உழவைத்தான் முதலில் வைத்தார்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர் அதற்கும் ஒருபடி மேலாக, ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' எனப் பாடினார். சர்தார் பட்டேல், ஒருமுறை அந்நிய தேசத்துக்குச் சென்றிருந்தபோது, “உங்கள் கல்ச்சர் என்ன? என அவரிடம் கேட்கப்பட்டபோது, “எங்கள் கல்ச்சர் அக்ரிகல்ச்சர்” எனப் பதிலளித்தார். இவையெல்லாம் விவசாயத்தின் மேன்மையை எடுத்துரைப்பன.
தொழில் வேண்டாம் என்றில்லை. அதேவேளையில் உழவையும் போற்ற வேண்டும்.
விவசாய நிலங்கள் ஏன் இன்று நீரின்றி வறண்டுபோயின? சுமார் 60-70 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த காடுகளின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு? அது ஏன் இன்று இத்தனை குறுகிப்போனது? மழைவளம் பொய்த்துப்போனதன் உண்மை யாது?
விவசாயி தனது சொந்த நிலத்தில் உழவு செய்ய முடியாமல் பிழைப்புக்காக நகர்ப்புறத்துக்கு ஓடுகிறானே, பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களே, ஏன் இந்த அவல நிலை? யார் உருவாக்கியது இதை? - இப்படிப் பல கேள்விகளுக்கு தமிழிசை மட்டுமல்ல, எந்தவொரு அரசியல்வாதியும் பதிலளிக்க முடியாது.
அல்லது பதிலளிக்கத் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் பரந்துபட்ட பார்வை தேவை. நாடாளுமன்றத்திலே பலம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யலாம் என்பதை நாடு மன்னிக்காது.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.