இப்படிக்கு இவர்கள்

எதிர்காலத்தின் எதிர்காலம்?

செய்திப்பிரிவு

திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தக் கடத்தப்படும் அப்பாவிச் சிறுவர்கள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அதைவிடவும் மிக அதிர்ச்சியானது, கடந்த 20 வருடங்களாக இந்தச் செயல்கள் நடந்து வருவதாக வரும் தகவல். ஐ.நா. மன்றத்தின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் (UNCRC) இந்தியா கையெழுத்திட்டு, ‘இந்த நாட்டின் குழந்தைகள் அனைவருக்கும், முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்’ என்ற உறுதியை அளித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆன பிறகும் இப்படியான செய்திகள் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக இருக்கின்றன.

எதிர்காலத்தின் நம்பிக்கையான குழந்தைகளின் இன்றைய ஆரோக்கியமான, உடல், மன வளர்ச்சியை உறுதி செய்வது அரசுகளின் கடமை மட்டுமல்ல.

நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் எந்த வடிவத்தில் வந்தாலும், அதைக் காத்திடத் தகுந்த சட்டங்களும், அதை வலிமையாக நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் தேவை.

அப்படியான ஒரு சட்டமாக சமீபத்தில் உருவாக்கப்பட்டதே ‘போக்சோ சட்டம் 2012’ குழந்தை களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட எவரும் எளிதில் தப்பிக்க வழியில்லாத வலிமையான சட்டம் இது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் நம்முடைய பொறுப்பற்றதனம் வெளிப்படுகிறது.

குழந்தைகளைக் கடத்துகின்ற இக்கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளை இதுமாதிரியான சிறப்புப் பிரிவுகளில் பதிவதன் மூலமே, குற்றவாளிகளைத் தண்டிக்க இயலும்.

அரசும், காவல் துறையும், அரசியல் கட்சிகளும், இத்தகைய கொடியவர்களிடம் கடுமையாகவே நடக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் குழந்தைகளைக் காப்பாற்ற இயலும்.

- வி.எஸ். வளவன்,சென்னை.

SCROLL FOR NEXT