இப்படிக்கு இவர்கள்

முதலில் தெளிவு பெறட்டும்

செய்திப்பிரிவு

‘ஒரு அம்பும் ஆறு வில்லாளிகளும்’ தலையங்கம் ஜனதா பரிவார் தலைவர்களின் சுயநலம் காரணமாகவே கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சரண்சிங்கின் பிரதமர் பதவி ஆசையைத் தனக்குச் சாதகமாக்கி மொரார்ஜி அரசைக் கவிழ்த்தது காங்கிரஸ். சந்திரசேகரின் பதவி ஆசையைப் பயன்படுத்தி வி.பி. சிங் அரசைக் கவிழ்த்தது காங்கிரஸ்.

காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து காங்கிரஸையே எதிர்க்க முயன்ற தேவகவுடா அரசைக் கவிழ்த்ததும் காங்கிரஸ்.

எப்போதெல்லாம் ஜனதா பரிவாரங்கள் ஆட்சி அமைக்கின்றனவோ அப்போ தெல்லாம் அவை முழுமையான ஆட்சியைத் தந்ததில்லை. மாறாக, நிர்வாகச் சீர்கேட்டினால் நாட்டைப் பின்னோக்கியே கொண்டுசென்றனர்.

பதவி வெறி, நிரந்தரக் கொள்கை இல்லாதது, சுயநலம் ஆகியவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஆறு வில்லாளிகளால் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. மாறாக, காங்கிரஸ் கட்சியின் தோழமை அமைப்பாக மட்டுமே செயல்பட முடியும். எனவே, ஆறு வில்லாளிகளும் ஒரு தெளிவு பெற்ற பிறகே ஒருங்கிணைவது நல்லது.

- ஜே. ராஜகோபாலன்,நெய்வேலி.

SCROLL FOR NEXT