‘நேபாளத் துயரம்' மனித இனத்துக்கே ஒரு எச்சரிக்கை. இயற்கைச் சீற்றத்துக்கு எதிராக மனிதனால் எதுவும் செய்யமுடியாது எனினும், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள முடியும். பூகம்பம் அல்லது நிலநடுக்கம் நிகழ வாய்ப்புள்ளப் பகுதி என்று தெரிந்ததும் அதைச் சமாளித்து நிலைத்து நிற்கக்கூடியவகையில், வீடுகளை அமைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
27-ம் தேதி வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, கட்டிட மேஸ்திரி பத்மநாபன் என்பவரால் கட்டமைத்துள்ள, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கான்கிரீட் உருளை வீட்டை, அதன் சாதக பாதகங்களை அரசு ஆய்வு செய்து அங்கீகரிக்கலாம்.
- கே. பலராமன்,திருவள்ளூர்.
***
உலகிலேயே அதிகமாக நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், எடை குறைவான மரத்தில் வீடுகள் அமைத்துக்கொள்கிறார்கள். மக்களும் அரசுடன் இணைந்து முன்னெச்சரிக்கையாகச் செயல்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் வீட்டின் அளவைக் கொண்டே ஒரு மனிதரின் செல்வச் செழிப்பு கணக்கிடப்படுகிறது. இதனால்தான் இயற்கைச் சீற்றம் ஏற்படும்போது பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. தனக்கு வராதவரை இது போன்ற துன்பங்களை யாரும் கண்டுகொள்வது இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமே.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.