ராமானுஜர் தொடருக்கு கருணாநிதி கதை வசனம் எழுதுவது இன்று ஒரு விவாதப் பொருளாகியிருக்கிறது.
ராமானுஜரின் வரலாற்றைத் திரித்துக் கூறிவிடுவார் என ஆத்திகர்களும், கொள்கைகளில் இருந்து தடம்புரண்டுவிட்டார் எனப் பகுத்தறிவுவாதிகளும் கூறும் நிலையில், ராமானுஜர் வரலாற்றை நடுநிலையுடன் முழுமையாகப் படித்தவர்களுக்குப் புரியும், திராவிட இயக்கங்கள் ராமானுஜரின் கொள்கைகளைத்தான் தங்கள் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டுள்ளன என்று.
பெரியார் ஈ. வெ. ரா. வைக்கம் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுடன் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியதற்கு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு - தற்சமயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை - ஆலயத்தின் உள்ளே சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர் ராமானுஜர். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களைத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்தார்.
ஆலயங்களில் கருவறைக்கு வெளியே ஒலித்த தமிழைக் கருவறையினுள் ஒலிக்கச் செய்தவரும் ராமானுஜர்தான். திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுப்ரபாதத்துக்குப் பதில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியைப் பாடச் செய்தவரும் ராமானுஜர்தான்.
வைணவ ஆலயங்களில் நான்கு வேதங்களுக்கு இணையாக ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடச் செய்தவரும் ராமானுஜர்தான். அனைவருக்கும் சம வழிபாட்டு உரிமை, தமிழ் வழிபாடு ஆகிவற்றுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ராமானுஜர்தான் திராவிட இயக்கங்களின் முன்னோடி.
- ஜே. ராஜகோபாலன்.நெய்வேலி.