இப்படிக்கு இவர்கள்

வாழ்ந்துகாட்டிய கல்வியாளர்கள்

செய்திப்பிரிவு

‘ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்! என்ற கட்டுரை இன்றைய சமூகத்துக்கு வழிகாட்டும் வகையில் அமைந்திருந்தது.

அன்றைய ஆசிரியர்கள் ஆசிரியர் பணியைத் திருப்பணியாகச் செய்து வாழ்ந்தவர்கள். மாணவர்களுக்குக் கல்வியை மட்டும் கொடுக்கவில்லை, வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்தார்கள். நல்லாசிரியர் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர்தான் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர் ஆசிரியர் பற்றி ‘என் ஆசிரியர்’ என்றே ஒரு நுால் எழுதியுள்ளார்.

திருச்சி பெரம்பலுர், அரியலூர் போன்ற பல்வேறு ஊர்களில் மாட்டுவண்டியில் சென்று, பல நூறு மாணாக்கர்களுக்குத் தமிழ்ப் பாடம் போதித்தவர், சிவகங்கை மாவட்டம் கல்லல் வேப்பங்குளத்தில் பிறந்த மதுரகவி ஆண்டவர் சாமிகள். இதுபோல் திருத்தணியில் வாழ்ந்த மங்கலங்கிழார் என்பவர் வீடுகள் தோறும் சென்று மாணவர்களுக்குத் தமிழ் அறிவும் வாழ்வியல் அறிவும் ஊட்டியவர்.

இவர்களைப் போலப் பல ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமில்லாமல், வாழ்ந்து காட்டிய மாமனிதர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

- புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்.ஓய்வுபெற்ற கல்வியாளர்

***

படிப்பு மட்டுமே திறமையில்லை

அஜிதனும் அரசுப் பள்ளியும் கட்டுரை மனதைத் தொடும் விதமாக உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

தனியார் பள்ளிகளில் கட்டுப்பாடு என்ற பெயரில் நிலவுகிற கொடுமைகளையும், படிப்பு என்ற பெயரில் புத்தகப் புழுக்களை மட்டுமே உருவாக்குகிற நிதர்சனத்தையும், பெற்றோர்களை அலைக்கழித்து அவமானப்படுத்தும் விதத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் இருக்கிற ஏற்றத்தாழ்வற்ற கல்வி நிலையையும், சக மாணவர்களின் ஏழ்மை நிலையைப் புரிந்துகொண்டு வருந்துகிற மனநிலையையும், பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் நாங்கள் படிக்கும்போது தெரியாத இன்னும் பல உண்மைகளையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

மீண்டும் நம்மைப் பழைய பள்ளி வாழ்க்கைக்குக் கைப் பிடித்து அழைத்துச் சென்ற விதமும், படிக்காத மகனின் நிலையை நினைத்து வருந்துகிற தந்தையின் மனநிலையும், மகனைத் தண்டித்துப் பின் வருந்துகிற உணர்வையும் கண் முன்னே கொண்டுவந்த கட்டுரையாளரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே மாணவனின் திறமை இல்லை.

அதையும் தாண்டி அவனிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவருவதுதான் ஆசிரியர்களின் முக்கியப் பணி என்பதை அஜிதன் மூலம் நெத்தியடி யாக உணர்த்தியுள்ளார் ஜெயமோகன்.

- நாஞ்சில் ஜோ,திருசெங்கோடு.

SCROLL FOR NEXT