இப்படிக்கு இவர்கள்

தஞ்சை மகள் அழுத கண்ணீர் காவிரி என்பார்

செய்திப்பிரிவு

தஞ்சை மண்ணில் பண்ணையாட்கள் செய்த கூலி வேலைகளையும், மண்ணையும் விவசாயத் தொழிலையும் அவர்கள் நேசித்த பாங்கையும் விவரித்த ‘மண்ணைப் பொன்னாக்கிய பண்ணையாட்கள்’ கட்டுரை அருமை.

அந்த மண்ணுக்கே உரிய, அப்போது புழங்கிய வார்த்தைகளால் அமைந்த அந்தக் கட்டுரையைப் படித்தபோது, கீழத் தஞ்சையின் வயல்களும், காவிரியின் வாய்க்கால்களும் கண்முன் தோன்றி மறைந்தன.

அதே சமயம், 1952-ல் ‘பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்’ போன்ற விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள், ஏதோ பண்ணையாட்களின் மேல் கொண்ட கரிசனத்தால் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டவை அல்ல. பி. சீனிவாசராவ் என்ற மாபெரும் கம்யூனிஸ்ட் போராளி, தனக்குத் தமிழ் மொழி தெரியாவிட்டாலும், அந்தப் பண்ணையாட்களுடனும், கூலித் தொழிலாளிகளுடனும் கூடவே இருந்து வாழ்ந்து, அவர்களைப் போராளிகளாக்கினார்.

அவர்களின் உரிமைகளுக்காக மாபெரும் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக உருவானதுதான் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்.

இந்த போராட்ட காலத்தின்போது வெண்மணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை ஒரே வீட்டில் அடைத்துத் தீயிட்டுப் பண்ணையார்கள் கொன்ற கோரச் சம்பவம் நடந்தது. மண்ணைப் பொன்னாக்கிய தொழிலாளர்கள் அந்த மண்ணிலேயே எரித்துக் கரியாக்கப்பட்டதுதான் மிகப் பெரிய கொடுமை.

“வான் அழுத கண்ணீரை மழை எனச்சொல்வார்…

பூ அழுத கண்ணீரைத் தேன் எனச் சொல்வார்…

சாணிப்பால் சவுக்கடியின் வலி பொறுக்காமல்

தஞ்சை மகள் அழுத கண்ணீர் காவிரி என்பார்”

- இந்தப் பாடல் ஒலிக்காத கிராமங்களை அந்த டெல்டா மாவட்டங்களில் இல்லை.

- சோ. சுத்தானந்தம்,சென்னை.

SCROLL FOR NEXT