‘தாமதமாகியும் கிடைக்காத நீதி’ தலையங்கம், நாம் அனைவரும் உரக்கச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுவதாக உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 42 முஸ்லிம் இளைஞர்கள் மாநில ஆயுதக் காவல் படையினரால் (பிஏசி) கூட்டிச் செல்லப்பட்டு, சில நாட்களுக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டு, ஒரு கால்வாயில் பிணமாகத் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்பதும், 28 ஆண்டுகளுக்குப் பின் ‘போதுமான ஆதாரங்கள் இல்லாதது, சாட்சிகளால் குற்றவாளிகளைச் சரியாக இனங் காண முடியாதது போன்ற காரணங்களால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
இதில் மிகக் கொடூரமான, கேவலமான விஷயம், கொலையுண்டவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் குறித்த காவல் துறைப் பதிவேடுகள் எல்லாமே இடைப்பட்ட ஆண்டுகளில் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுவதுதான். சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறக் கூடாது.
குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகச் சாட்சிகளையும் ஆதாரங்களையும் மறைப்பவர்கள் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 201-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் தடயங்களை மறைத்தவர்கள் 7 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்கள்.
கொலையுண்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களோ மனித உரிமை ஆர்வலர்களோ இதில் உரிய மேல் நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்கும்.
கேலிக்கூத்து நடத்தும் காவல் துறை, கண்டுகொள்ளாத அரசாங்கம் ஆகியவற்றுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கும்.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு),உலகனேரி.