‘விளையாட்டாக அரங்கேறும் விபரீதங்கள்’ - கட்டுரை விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும் என்பதை மிக அருமையாக உணர்த்தியிருக்கிறது.
போட்டியில் ஒருபுறம் வெற்றி என்றால், மறுபுறம் தோல்வி இருக்கத்தான் செய்யும் என்பதை உணராதவர்கள்தான் இப்படி அராஜகம் செய்கிறார்கள். இந்தியா ஆடுவதை ரசிக்க பாமரனுக்கு இருக்கும் உரிமையைப் போல் அனுஷ்காவுக்கும் உண்டு. அதே போல் யாரைக் காதலிக்க வேண்டும் என்ற உரிமை கோலிக்கு உண்டு. இதை விமர்சிப்பது அநாகரிகம்.
- கண்ணன் ஸ்ரீனிவாசலு, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
***
எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுவது இந்திய மக்களின் வாழ்வோடு இணைந்ததாகவே இருக்கிறது. விளையாட்டில் வெற்றி-தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கு இன்னமும் வரவில்லை. கிரிக்கெட்டின் மீதான வெறி ரசிகர்களை மதி மழுங்கச் செய்துவிட்டது. இதற்கு நமது ஊடகங்கள் நன்றாகவே உரம்போடுகின்றன.
- சுகுமார்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…
***
நேர்மைதான் லட்சியம்
எப்போதும் நாமே வெற்றி பெற வேண்டும் என்ற மக்களது எண்ணம் தவறானது.
விளையாட்டுகள் போட்டி முறையில் நடைபெற்றாலும் தோல்வி என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
நம்மைவிட அடுத்தவர் சிறப்பாக ஆடினார் என்று ஏற்றுக்கொள்வதே விவேகம். நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் பேரன் டி குபர்டீன் ‘‘வெற்றி முக்கியமல்ல, நேர்மையுடன் பங்கேற்பதே ஒலிம்பிக்கின் லட்சியம்’’ என்றார். போட்டிகள் நம்மை வளர்க்கும்.
மிஞ்ச வேண்டும் என்ற பேராவலால்தான் 100 மீட்டர் ஓட்டத்தை 10 விநாடிக்குள் ஓடும் திறனைப் பெற முடிந்தது. ஒவ்வொரு தோல்வியும் நம்மை அலசி, நம் திறன்களை வளர்த்துக்கொள்ள வழி ஏற்படுத்துவதே நாகரிகத்தின் உச்சம். ஆட்டக்காரர்களைத் தாக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
விளையாட்டை பொழுதுபோக்காக அனுபவிக்க வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.