ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமின்றி, சமுதாயத்தை மேம்படுத்தும் கூறுகளில் கல்வியே பிரதானமாகிறது.
இந்தியாவில் இருந்த சாதிகள், பெண்ணடிமைத்தனம் போன்றவையே கல்வியில் இந்திய மக்கள் தன்னிறைவு பெறப் பெரும் தடையாக இருந்தன.
இத்தகைய கூறுகளிலிருந்து நாம் இன்றுவரை முற்றிலுமாக விடுபடவில்லை என்பதையே, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எழுத்தறிவு பெற்றவர்களின் புள்ளிவிவரம் காட்டுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கல்விக்காக மத்திய - மாநில அரசாங்கங்களால் பல்வேறு கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு, பல கல்வி முறைகள் இந்தியக் கல்வி முறையில் புகுத்தப்பட்டது.
அதன்வாயிலாக எழுத்தறிவு சதவீதம் சற்று முன்னேற்றம் கண்டாலும், அவை ஏனோ அடித்தட்டு மக்களையும் பெண்களையும் முழுமையாகச் சென்றடையவில்லை. அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயில இயலாமல் இடைநிற்றலுக்கு வறுமையே மிகவும் முக்கியக் காரணமாக அமைகிறது. அதனால், அவர்களின் வறுமையைப் போக்க, அரசு அம்மக்களுக்கான தொழில் வளங்களை உருவாக்கினால், வருமானம் வரும். இதனால், கல்வி பாதிப்படையாமல் தொடரும்.
அதேபோல் பெண் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பும் அநேக இந்தியக் கிராமங்களில் மறுக்கப்படுகிறது. இதற்குக் குடும்ப அமைப்பும் பிற்போக்குத்தனமும் மிகமுக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இத்தகைய கிராமங்களின் பக்கம் கல்வி ஆர்வலர்களின் கவனம் திரும்ப வேண்டும்.
மேலும், கிராமப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கொஞ்சம் பொதுநோக்குடன் செயல்பட்டு, கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் முழுமையான எழுத்தறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா விரைவில் உருவாகும்.
- ஜோ. செந்தில்நாதன், கீழக்கரை.