இப்படிக்கு இவர்கள்

வரவேற்கத் தக்க தீர்ப்பு!

செய்திப்பிரிவு

சமூக வலைத் தளங்கள் வாயிலாக தகவல் கூறுவதையும் கருத்துக் கூறுவதையும் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப சட்டத்தில் 2008-ல் கொண்டுவரப்பட்ட 66(ஏ) சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருப்பது வரவேற்கத் தக்க முடிவு.

கருத்துக்குக் கருத்து, சொல்லுக்குச் சொல், நாகரிகக் கருத்துப் பரிமாற்றம் ஆகியவை உள்ள நாட்டில்தான் ஜனநாயகம் தழைத்து வளரும். தவறான கருத்தைப் பதிவு செய்தாலும் அது குறித்து மறுப்புக் கூறும் வாய்ப்பும் சமூக வலைத் தளங்களில் நிறைய உண்டு.

சமூக ஊடகங்களின் பங்களிப்பினால்தான் இன்று பெருமளவு இளைஞர்களும், பெரும்பாலான பெண்களும் அரசியல் குறித்து புரிந்துள்ளனர் என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில், ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

- இனியன்,பொதுச் செயலாளர், இளைய தலைமுறைக் கட்சி.

***

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவு 66ஏ-வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இந்தத் தீர்ப்பின் மூலம், இணைய கருத்து சுதந்திரம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவதூறுக் கருத்துக்களை வெளியிடாமல் இணையச் சுதந்திரத்தைச் செவ்வனே பயன்படுத்துவதும், அதைத் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதும் மட்டுமே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெருமைப்படுத்துவதாக அமையும்.

- விஜயானந்த்,கோயம்புத்தூர்.

SCROLL FOR NEXT