அமெரிக்காவில் இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தலையங்கம் பல விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
நிறம் மட்டுமே ஒரு சமூகத்தின் இயல்புகளை நிர்ணயித்து விடாது என்பதை ஒட்டுமொத்த உலகமும் உணர வேண்டும். சிறு தீப்பொறி காட்டையே அழிப்பதுபோல, சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒரு நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்திவிடுகின்றன.
பழைய சம்பவங்களிலிருந்து அமெரிக்கர்களில் சிலர், இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தெளிவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையை விடுத்து ‘இனமேட்டிமை’ எனும் தூய தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.
***
அமெரிக்காவில் சுரேஷ் பாய் படேல் தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், தொழிலதிபர் அமித் படேல் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இவை தொடராத வகையில், அமெரிக்க அரசிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.