இப்படிக்கு இவர்கள்

நிச்சயம் அவர்கள் நம் நங்கையர்களே!

செய்திப்பிரிவு

மால் அயன் முருகன் எழுதிய ‘நங்கையரே என்னை மன்னியுங்கள்’ எனும் கட்டுரை நெகிழச் செய்தது. பெண்ணாக உணரும் ஆண் என்பதற்கு தமிழில் அருமையான மரபு இருக்கிறது.

நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் கசிந்து உருகிய போதெல்லாம தம்மைப் பெண்ணாகத்தானே உயிரும் ஊனுமாக உணர்ந்து கொண்டார்கள். ‘கண்ணன் என் காதலன்' என்று உணர்ந்து கொண்டதால் அல்லவா பாரதி கண்ணனுக்குக் காதலியானான்; நம்மில் ஒரு கவிஞன் தன்னைத் ‘தாயுமானவன்' என்றே அறிவித்துக் கொண்டான்.

எனில் நம் சகோதரிகளை இழிவுபடுத்துவதோ புறக்கணிப்பதோ எந்த வகையிலும் நியாயம் இல்லை. ‘திருநங்கைகள்' என்று அழைப்பது கூட ஒரு வகையில் பேதப்படுத்துவதுதான். அவர்கள் நம் சகோதரிகள், நம் நங்கைகள்!

- ஜே.எஸ். ஷாஜஹான் முபாரக்,உடுமலைப்பேட்டை.

***

உத்தரப் பிரதேசம் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். திடீரென அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. ஏழையான அந்தப் பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அந்தப் பெட்டியில் சில திருநங்கைகளும் இருந்தனர். அவர்கள் உடனே வந்து அந்தப் பெண் இருந்த இடத்தை திரைச் சீலைகளால் மறைப்பு ஏற்படுத்தி பிரசவிக்க உதவினார்கள். ஆண் குழந்தை பிறந்ததும் அதை எடுத்து கொஞ்சி வாழ்த்தினார்கள். இச் செய்தியைப் பத்திரிகையில் படித்தபோது கண்கள் கசிந்தன. அத்தகையவர்களை சமூகம் ஏளனம் செய்வதும் மனிதாபிமானமற்று நடத்துவதும் சரியல்ல.

- எம். விசுவநாதன்,மின்னஞ்சல் வழியாக…

***

அவமானம் யாருக்கு?

வரி செலுத்தாத நட்சத்திர ஓட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து ஒரே நாளில் ரூ.1.5 கோடி வரி வசூல் செய்திருக்கிறது சென்னை மாநகராட்சி. வரி செலுத்தாதவர்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, திருநங்கைகளை அவமதித்துள்ளது சென்னை மாநகராட்சி. பெரிய பொறுப்புகளில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கே இது போன்ற விஷயங்களில் சரியான புரிதல் இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

- ச.சுப்பாராவ்,மதுரை.

SCROLL FOR NEXT