விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் பொரசக்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக உள்ளேன்.
‘தி இந்து’ நாளிதழில் ‘ஆண்டவன் நின்று கேட்பான்’ (13.02.2015) என்ற கட்டுரையைப் படித்தேன். ஆன்மிகம் இன்று வியாபாரமாகிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்டுரையாளர் சிதம்பரம் பற்றியும் ஸ்ரீரங்கம் பற்றியும் கூறியவை அட்சரசுத்தமான உண்மை. ஆனால், அர்ச்சகர்கள் பற்றிய கட்டுரையாளரின் குறைபாடு சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அர்ச்சகர்களில் கிராமத்தில் உள்ளவர்கள், நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் என்று இரு வகைப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், ஆழ்வார்கள் பாடல் பெற்ற திவ்யதேசங்கள் போன்றவற்றில் பெரும்பாலானவையும், சிறு சிவாலயங்கள் பலவும் கிராமப் பகுதிகளிலேயே உள்ளன. இத்தகைய கிராம கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு உரிய மரியாதையும் கிடையாது, வருமானமும் சம்பளமும் கிடையாது என்பதே உண்மை. வருமானம் வரக்கூடிய நகரத்துக் கோயில்கள்மீதுதான் அறநிலையத் துறை கவனம் செலுத்துகிறது.
கிராமப்புறக் கோயில்கள் முழுவதும் புறக்கணிக்கப்படுகின்றன. எப்போதாவது வருடத்துக்கு ஒரு முறை வரும் நிர்வாக அதிகாரி அர்ச்சகரை அடிமையைப் போல்தான் நடத்துகிறார். கிராமங்களில் உள்ள அர்ச்சகர்கள் ஊர்க்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழலும் உள்ளது. எல்லோரிடமும் சிரித்துப் பேசி, இயைந்தும் நயந்துமே தனது உரிமையும் பலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் கிராமத்து அர்ச்சகர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- தில்லை எஸ். கார்த்திகேய சிவம்,பொரசக்குறிச்சி.
***
ஆண்டவன் கேட்டபாடில்லை
தமிழக இந்தியக் கோயில்களின் பராமரிப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ‘ஆண்டவன் நின்று கேட்பான்’ கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 60 கோயில்களிலும் நடந்துவரும் பகல் கொள்ளை அதிர வைக்கிறது. எல்லாக் கோயில்களிலும் ஆண்டவன் ஆதிகாலம் முதல் இன்று வரை நின்றுகொண்டுதானிருக்கின்றான். ஆனால், எதுவும் கேட்டபாடில்லை.
-நா.பரமத்தி.கு. பாரதிமோகன்