இப்படிக்கு இவர்கள்

என்றும் மறைவதில்லை

செய்திப்பிரிவு

மூடநம்பிக்கைகளை விரட்டுவது எளிதான செயல் அல்ல. மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட தீரத்துடன் போராடியவர் பெரியார்.

பல அவமானங்களை அவர் சந்தித்தபோதும், தன் இறுதிக்காலம் வரை உறுதியுடன் போராடினார். அதன் விளைவாக, தமிழகத்தில் ஓரளவு மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டனர். இந்த அரும்பணியை, மகாராஷ்டிர மாநிலத்தில், தபோல்கரும் பன்சாரேவும் ஏற்று மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினர்.

ஏமாற்றுச் செயல்களை ஆதாரத்துடன் மக்களிடையே விளக்கி, ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆதிக்க சக்திகளின் ஆணி வேரை அசைத்த காரணத்தால், அவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற சமூக சிந்தனையாளர்கள், மக்கள் மனதில் என்றுமே மறைவதில்லை. இன்னும் பல தபோல்கரும் பன்சாரேவும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

- அ. சிவராமன்,மேட்டூர் அணை.

நாங்கள் இறந்தும் வாழ்கிறார்கள்

தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்!’ - மதவெறியும் மூடநம்பிக்கையும் ஒன்று சேர்ந்து, அவர்களுடைய சொந்த மண்ணிலேயே வெட்டிச் சாய்த்த, மகத்தான இரண்டு தீரமிக்க போராளிகள்குறித்தான கட்டுரை மிகவும் அருமை.

கலிலியோ முதற்கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராகவும் மதவெறிக்கு எதிராகவும் போராடி உயிர் துறந்த எண்ணற்ற மனிதர்களின் தியாக வரிசையில் தபோல்கரும் பன்சாரேவும் சேர்ந்துவிட்டார்கள்.

நொடிப் பொழுதேனும் முகிழ்த்தெழும் மதவெறிக்கு எதிராகக் கற்றுத்தரும் பாடங்கள் நிறையவே உள்ளன - இவர்களின் மரணத்தில். “தங்களது தத்துவத்தை எதிர்ப்பவர்களைப் பாசிச சக்திகள் மன்னிப்பதில்லை. ஆனால், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் ஒருபோதும் இந்தப் போராட்டத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை.”

- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT