ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தத்துவஞானி என்றே நம்புகிறோம். உண்மையில் அவர், தத்துவத்தை முன்வைக்கும் தருக்கவாதி அல்ல. ‘நம்பிக்கொண்டிருக்கும் தத்துவங்களின்’ தாக்கத்திலிருந்து ‘விடுதலை’ பெறுவதே ‘உயர்ஞானம்’ என்பதுதான் அவரின் எளிய சிந்தனை. வேறுவகையாகச் சொல்லப்போனால், ஒரு கொள்கைக்கோ அல்லது சித்தாந்தத்துக்கோ நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதே அவரின் மையச் சிந்தனை.
“எந்த ஒன்றை எடுத்துக்கொண்டாலும் சரி/தவறு, இப்படி/அப்படி, வரும்/வராது என இரண்டு பக்கங்கள்தான் இருக்கின்றன என நாம் கருதிக்கொண்டிருக்கிறோம்.
உண்மையில், இருப்பவை ‘பலவே’ தவிர ‘இரட்டை’ அன்று. அந்தப் ‘பலவும்’ ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவை. எப்போதும் இதை நாம் மறந்துவிடக் கூடாது” எனும் ஜே.கே-வின் சிந்தனை வழியாகவே அவரைக் கண்டுகொண்டேன். ‘கற்றுக்கொண்டவற்றிலிருந்து விடுபடச் சொல்வதே’ அவரின் கல்வி.
அக்கூற்றை மேலோட்டமாகப் புரிந்துகொள்வது ஆபத்தாகவே அமைந்துவிடும். ‘கணந்தோறும் வாழ்’ என்பதாக அதைப் புரிந்துகொள்வதே நலம் பயக்கும்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.