சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த மோதலில், வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்தது.
இந்திய வழக்கறிஞர்களின் சட்ட அறிவையும் வாதத் திறமையையும் ஆங்கிலேய நீதிபதிகளே வியந்து பாராட்டியிருக்கிறார்கள். பல இந்திய நீதிபதிகளுக்கு நீதிமன்ற வளாகத்தில் சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் ரவுடிகள்போல் நடந்துகொள்வது பேரவமானம்.
இதெற்கெல்லாம் காரணம், நீதித் துறையில் அரசியல் புகுந்ததுதான். தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் தரவில்லை என்றால், நீதிபதியையே மிரட்டும் அளவுக்குச் சில வழக்கறிஞர்கள் தரம்தாழ்ந்து போயிருக்கிறார்கள் என்றும், நீதிமன்ற வளாகத்திலேயே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கிரிமினல் வழக்குகளுக்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்களே இப்படிச் செய்தால், நீதிக்காக நாம் எங்கே சென்று போராடுவது? யாரிடம் முறையிடுவது? இத்தகைய ஒழுங்கீனங்களைத் தட்டிக்கேட்க வேண்டிய பார் கவுன்சில் இனியும் மவுனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்ற வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.