இப்படிக்கு இவர்கள்

மொழிப் போராட்ட நினைவுகள்

செய்திப்பிரிவு

எனது 40 ஆண்டுகள் ஆசிரியர் வாழ்க்கையில் மறக்க இயலாதது இந்தி எதிர்ப்புப் போராட்டம். மொழிப்போர் என்று குறிப்பிடுவது பொருத்தமல்ல.

தாய்மொழியாகிய தமிழ் வளர்வது அப்போராட்டத்தின் நோக்கமாக இருக்கவில்லை. அதன் காரணமாக வந்த இருமொழிக் கொள்கையும் தமிழ் சார்ந்து இல்லை. நான் அப்போது பவானியில் தலைமையாசிரியராக இருந்தேன். அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் தீவிரமாகப் போராட்டத்தில் இறங்கினார்கள். பவானி-குமாரபாளையம் காவிரிப் பாலம் அருகில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி அரை நிர்வாணமாக அந்தப் பாலத்தில் ஓடினார். அவரை ஆற்றில் தள்ளும் கும்பலின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. என்னைக் காவல் துறை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியது.

ரவுடிகள் பட்டியல் கேட்டார்கள். ரவுடிகள் ஒருவரும் இல்லை என்றேன். போராட்டத்தில் தலைமையேற்ற மாணவர்களின் பெயர்களை ஒவ்வொருவராகச் சொல்லி “இவன் எப்படி?, இவன் எப்படி?” என்று கேட்டார்கள். “பள்ளியில் உள்ளவர்கள் நல்ல மாணவர்கள்தான்” என்று நான் கூற, “உங்கள் பள்ளியில் ரவுடிப் பையன்களே இல்லையா?” என்று கேட்டார்கள்.

“மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக ஆக்குவதற்கே பள்ளி” என்று கூறி, எந்தவொரு மாணவரையும் காவல் துறையிடம் காட்டிக்கொடுக்கவில்லை. பவானி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொடுத்த நற்சான்றிதழ் அடிப்படையில் அடிவாங்காமல் தப்பித்தேன். சில தலைமையாசிரியர்கள் விவேகமின்றி வேண்டப்படாத மாணவர் பட்டியல்களைக் கொடுக்க… அவர்கள் ஊர் ஊராக விரட்டப்பட்டு தலைமறைவாகப் போக நேர்ந்தது. பவானி, ஈரோடு முழுமையும் கர்நாடகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

மொழி தெரியாமல் பல கொடுமைகள் நடந்தன. அடக்குமுறையின் உச்சகட்டம். கல்வித் துறை மவுனம் சாதித்தது. எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. வருவாய், காவல் துறை அதிகாரிகளே பள்ளி திறப்பது, மூடுவதுபற்றிய அறிவிப்புகள் கொடுத்தார்கள். எனினும், தனி மாணவன் மாட்டிக்கொண்டால் அடி உதை என்ற நிலையை மாற்றிக் கூட்டுப் போராட்டங்களே பாதுகாப்பு என்று மாணவர்கள் அறிந்திட இந்தி எதிர்ப்புப் போராட்டமே உந்துசக்தியாக இருந்தது.

- ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்,சென்னை.

SCROLL FOR NEXT