சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைக் கைதுசெய்தால், மேற்கு வங்கம் பற்றி எரியும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பேசியிருப்பது பொறுப்பற்ற, ஆபத்தான செயல்.
மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவற்றைச் சட்டபூர்வமாகச் சந்திக்க வேண்டும். இப்படிப் பதற்றத்தைத் தூண்டும் வகையில் தனது கட்சியினர் பேசுவதை அனுமதிக்கக் கூடாது. பெரும்பாலும் கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்து ஆதாயம் பெறுவதற்காகவே கட்சிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்.
ஆர். கண்ணன்,மின்னஞ்சல் வழியாக…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய குழு அமைப்பதற்கே, 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை என்றால், பரிசீலனைக்குப் பின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தாமதமானால் என்னென்ன நடக்கும்? தலைவர்களும் அதிகாரிகளும் இதுபற்றி ஏன் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார்கள்? பேருந்து இல்லாமல் நடு இரவில் பேருந்து நிலையங்களில் பெண்கள் காத்துக் கிடந்ததையும், பலர் தேர்வுகளை எழுதச் செல்ல முடியாமல் தவித்ததையும் அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது?
- அ.மஹபூப் பாஷா,‘தி இந்து’ இணையதளத்தில்…