புராணக் கதைகள், செவிவழிச் செய்திகள், கற்பனைக் கதாபாத்திரங்கள் ஆகியவை உதாரண மனிதர்களை உருவாக்கி, அவர்தம் வாழ்க்கையை மற்றவர்களுக்குப் பாடமாகவும் அவர்வழி அனைவரும் நடந்து நற்சமூகத்தை உருவாக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டவை. இதுபோன்ற உதாரண மனிதர்கள் உருவாக மாட்டார்களா என ஏங்க வைக்கும் அளவுக்கு கற்பனைக் கதாபாத்திரங்கள் எராளமாக உள்ளன. எல்லாக் காப்பியங்களிலும் நயம்கருதி பல்வேறு கற்பனைச் சம்பவங்களை உருவாக்கி, மக்களுக்குப் பொழுதுபோக்குடன் நல்ல எண்ணங்களை விதைத்துள்ளனர்.
ஆனால், அதீத ஆர்வக்கோளாறு காரணமாக, அவற்றைச் சரித்திரச் சம்பவங்களாக நினைத்து, அப்படியே நிறுவிடச் செய்யும் முயற்சி நகைப்புக்கிடமாகிறது. பட்டிமன்றப் பொருளாக எடுத்து ஆவேசமாகப் பேசும்போது, பொழுதுபோக்குக்குப் பயன்படலாம். ஆனால், அவை வரலாறு ஆகிவிடாது. அண்மையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்ணகி எரியூட்டிய மதுரையின் எச்சங்களுக்குச் சான்று இருப்பதாகக் காண்பித்தது வியப்பூட்டியது. பகுத்தறியும் திறனை மழுங்கடிக்கும் அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டுசெல்கிறார்கள். சாமானியர்கள் கிடக்கட்டும், ஆனால் பிரதமரே இரண்டையும் குழப்பிக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாயின், அது கவனிக்கத் தக்கது.
- மஹாலிங்கம்,மின்னஞ்சல் வழியாக…