டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை (‘தி இந்து’, ஜன 8) உள்ளார்ந்த நல்லெண்ணத்துடனும் நேர்மையுடனும் எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால், கட்டுரை அனைத்து மதவாதிகளுக்கான அறைகூவலாக இருந்திருக்க வேண்டும். இஸ்லாமியர் கூண்டுப் பறவைகளாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பான்மையினரான இந்துக்களாலும், பிற சமூகத்தாராலும் திணிக்கப்பட்டதல்லவா? பெரும்பான்மையோரது பொறுப்புகள்தான் ஏராளம்.
ஒரு சிறு பகுதியே ஆனாலும் பகைத்துக்கொள்ள முடியுமா. புறக்கணிப்புக்கு உள்ளாவோம் என்ற அச்சம் காரணமாகத்தான் மவுனம் சாதிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அமைதியான சூழலில் வாழவே விரும்புகின்றனர். சமீப காலங்களில் இந்துத்துவாவினர் போடுகின்ற கோஷங்களும் ஈடுபடுகின்ற செயல்பாடுகளும் இந்து அல்லாத மற்ற மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. இன்றைக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களை நோக்கி நமது அறிவுரைகள் இருத்தல் வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
***
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஒரு பதில்
டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை முக்கியமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறது. ‘இஸ்லாத்தின் பெயராலும், முஸ்லிம்களின் பெயராலும் சிலர் நடத்தும் பயங்கரவாதச் செயல்களை இந்திய முஸ்லிம்கள் ஏன் ஒன்றுதிரண்டு கண்டிக்கவில்லை?’ என்பதே அது! பயங்கரவாதத்தையோ அதைச் செய்பவர்களையோ இஸ்லாம் ஆதரிப்பதில்லை. அது வன்முறையைக் கண்டிக்கிறது.
குர்-ஆனில் இறைவனின் கட்டளைகள் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையில் இருக்கும்போது, கொள்கையுள்ள எந்த முஸ்லிமும் அதுபோன்ற அடாத செயல்களில் ஈடுபட மாட்டார். இன்று ஐ.எஸ்., அல்-காய்தா, தலிபான் எனப் பல்வேறு பெயர்களில் செயல்படும் சில அமைப்பினர் செய்யும் வன்முறைகளையும், பயங்கரவாதச் செயல்களையும் முஸ்லிம்களில் அறுதிப் பெரும்பான்மையினர் எதிர்க்கிறார்கள்.
இந்தியாவிலும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து இவற்றை எதிர்த்தேவருகின்றன. குறிப்பாக, அகில இந்திய அளவில் செயல்படும் ஜமாத்தே இஸ்லாமி, ஜம்மியத்துல் உலமா போன்ற இயக்கங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்புகின்றன. இந்திய முஸ்லிம்களின் செல்வாக்கு பெற்ற மதரஸாவான ‘தாருல் தேவ்பந்த்’ பயங்கரவாதத்துக்கு எதிராக பத்வா (மார்க்கத் தீர்ப்பை) வழங்கியுள்ளது. ஆனால், பொதுவில் இதையெல்லாம் கண்டித்து முல்ஸிம்கள் ஏன் பேரணி நடத்தவில்லை என்ற கேள்விக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன:
இந்தியாவின் நான்கைந்து மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைப்பாகத் திரளவில்லை. மக்கள் இயக்கங்களும் அவர்களிடம் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதோ, குஜராத் கலவரத்தின்போதோகூட அவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லை. காந்தியின் படுகொலையை எல்லோரும் கண்டித்தார்கள். காந்தியைக் கொன்ற கோட்சேவின் சொந்த சமூகமும்கூடக் கண்டித்தது.
அவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திக் கண்டிக்கவில்லை. அதனால், அந்தச் சமூகம் கோட்சேயின் செயலை ஆதரித்தது என்று பழிபோடுவதா? காந்தியைக் கொன்ற கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என இந்து மகாசபை அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து இந்துக்கள் அல்லது இந்துக்கள் என கூறிக்கொள்பவர்கள் யாரும் பேரணி நடத்தவில்லை.
அதற்காக அந்தச் சமூகமே அதை மவுனமாக ஆதரிக்கிறது என்பதா? பாபர் மசூதியை இடித்ததை 90% பெரும்பான்மை இந்துக்கள் அங்கீகரிக்கவில்லை. அதேசமயம், அவர்கள் பேரணி நடத்திக் கண்டிக்கவும் இல்லை. அதற்காக பாபர் மசூதி இடிப்பை இந்துக்களில் பெரும்பான்மையோர் ஆதரிப்பதாகக் கருதுவது எவ்வளவு கொடுமையோ, அதேபோன்ற ஒரு கருத்தியலை டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை உருவாக்கிவிட்டது. தேசிய அளவில் பலவீனமாக இருக்கும் ஒரு சமூகத்தை ‘பேரணி ஏன் நடத்தவில்லை?’ எனக் கேள்வியெழுப்பிக் காயப்படுத்துவது நியாயம்தானா?
- ஜே.எஸ். ரிபாயீ,தலைவர், தமுமுக