காந்தியைக் கொன்றவருக்குக் கோயில் கட்ட முயல்பவர்கள் இருக்கும் காலகட்டம் இது.
இப்படியான சூழலில் அவர் நமக்கு எந்த அளவுக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்கும் ‘காந்தி: இந்தியாவின் வை-ஃபை’ கட்டுரை மிகவும் முக்கியமானது. அரசுருவாக்கக் காலம் தொடங்கி இன்றைய உலகமயமாக்கல் வரை அறத்தை மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறோமா என்று பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. காந்தியும் அந்தக் குற்றவுணர்விலேயே வாழ்ந்திருக்கிறார்; எனினும், அதிலிருந்து விடுபடுவதற்கான வலுவான செயல்களையே தன் வாழ்க்கை முழுதும் மேற்கொண்டார். பொய் பேசாதிருக்கும் நேரங்களில் சத்தியம் காப்பாற்றப்படுகிறது, பகையை வளர்க்காத சமயங்களில் நட்பு பேணப்படுகிறது, வெறுப்பு நினைக்கப்படாத பொழுதுகளில் அன்பு தக்கவைக்கப்படுகிறது; காந்தியெனும் குறியீடு முன்வைப்பது இவற்றைத்தான்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.
***
இன்றைய உலகத்தில் காந்தி மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார். எதற்கும் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாத அறமே வாழ்வின் வெற்றியாகும். காந்தி இதற்கு உதாரணம். எனவே, சத்தியத்திலிருந்தும் நேர்மையிலிருந்தும் எப்போதும் திசைமாறாத அறக் கோட்பாடே இன்றைய உலகத்தின் தலைவர்களுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்கும் தேவைப்படுகிறது. ஏனெனில், சுய தேவைகளை நிறைவுசெய்துகொள்வதற்கான களங்களாக அரசியலையும் நிர்வாகத்தையும் மாற்றிவிட்டனர் பலர். இவற்றிலிருந்து இவர்களை விடுவிக்கவும் இனிவரும் தலைமுறையில் அறம் சார்ந்த மனநிலை உருவாகவும் காந்தி என்ற மனிதர் தேவைப்படுகிறார். எக்காலத்துக்கும் தேவைப்படுவார்.
- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி,