இயற்கையின் நுட்பமான சங்கிலி எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான் என்பதை வலியுறுத்திய வறீதையா கான்ஸ்தந்தின் ‘கடலோர வனங்கள் எங்கே?' கட்டுரை படித்தேன்.
கடலோரத்துக்கு அடையாளமான மண் மேடுகளை உருவாக்கிய காடுகள் அழிக்கப்பட்டதுபோல, மண்மேட்டை உருவாக்கும் மற்றொரு காரணியான கடற்கரையில் வேலி போல் தொடர்ச்சியாக வளர்ந்திருந்த முள்ளி எனப்படும் ‘ராவணன் மீசை' செடியும் காணாமல் போய்விட்டது.
விளைவு, கடல் நீர் எல்லை கடந்து எளிதாக ஊரை நெருங்குகிறது. கடலைக் காப்பாற்ற ராவணன் மீசை செடியைப் பாதுகாப்போம் என ‘மன்னார் வளைகுடா திட்டம்' மூலம் பெரும் பிரச்சாரமே நடைபெற்று வருகிறது. மேலும், ஆறுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளால்
தண்ணீர் வரத்து தடைபடுவதால் பெரும்பான்மையான ஆறுகளில் தண்ணீர் கழிமுகம் வரை வருவதேயில்லை. இதனைத் தடுக்க ஒரே வழி, ஆற்றை ஆழத் தோண்டி மணலை அள்ளும் மணற்கொள்ளை அடியோடு தடுக்கப் பட வேண்டும் என்பதே. மழை பெய்து நன்னீர் கடலில் கலந்தால்தான் கடலில் மீன் கிடைக்கும் என்ற உண்மையைக் கடல் இல்லாத பகுதி மக்களும் தெரிந்துகொள்ள வழி செய்த கட்டுரை அருமை.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.